![Vijay Antony speech at mazhai pidikatha manithan trailer launch](http://image.nakkheeran.in/cdn/farfuture/-1CSWnPbrXj30Q4NdIcjjo6jKMD-c8E9XL-opTMqw_o/1719830675/sites/default/files/inline-images/vijayantonyni.jpg)
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (29-06-24) நடைபெற்றது.
இதில், நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, “என் நண்பர் விஜய் மில்டன் சாருடன் இணைந்து பணியாற்றி இருப்பது மகிழ்ச்சி. இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் இவரும் ஒருவர். 'பிச்சைக்காரன்' படத்தில் அருமையான வேலை செய்திருப்பார். நான் இதுவரை பணிபுரிந்த படங்களில் பிரம்மாண்டமாக வந்துள்ள படம் இதுதான். சத்யராஜ் சார், சரண்யா மேம், முரளி ஷர்மா சார், டாலி தனஞ்செயன் என இத்தனை சீனியர் நடிகர்களுடன் நடிப்பேன் என நினைக்கவே இல்லை. படத்தின் கடைசியில் கெட்டவனை அழிக்கக் கூடாது. கெட்டதைத்தான் அழிக்க வேண்டும் என்று இயக்குநர் சொன்ன விஷயம் பிடித்திருந்தது. படம் நன்றாக வந்திருக்கிறது. ஜூலை மாதம் படம் வெளியாகும். பார்த்துவிட்டு சொல்லுங்கள்” எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, ‘தமிழ் சினிமாவில் நல்ல சகுனம் பார்த்துதான் பூஜையும், படப்பிடிப்பும் நடத்துவார்கள். தலைப்பும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இனிமேல் உங்களது அடுத்தடுத்த படங்களில் தலைப்பு எப்படி இருக்கும்’ எனச் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த விஜய் ஆண்டனி, “இனியும் என் படங்களில் தலைப்பு கரடு முரடாகத்தான் இருக்கும். சினிமாவை பொறுத்துவரை எனக்கு செண்டிமெண்ட் கிடையாது. மனசுதான் எல்லாவற்றுக்கும் காரணம். ராகு காலத்தில் கூட என் படத்தை ஆரம்பித்து காட்டுகிறேன். எமகண்டத்தில் படத்தை ரிலீஸ் செய்கிறேன். ராகுகாலம், எமகண்டம் இனிமேல் இது என்னுடைய படத்தலைப்பு. இந்த டைட்டிலை வேறு யாரும் வைக்க வேண்டாம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கலகலப்பாக பேசினார்.