![vignesh shivan directing ajith and nayanthara ak62 film](http://image.nakkheeran.in/cdn/farfuture/9GwCxj600jHjNX9YQZqPZJ56Ks97LXBTVYDvT-k-KUs/1647346492/sites/default/files/inline-images/294_10.jpg)
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றாலும், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 'அஜித்தின் 61' படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் மோகன் லால் அல்லது நாகார்ஜூனா இருவரில் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், இவர்களுடன் பாலிவுட் நடிகை தபுவும் மற்றும் பிக்பாஸ் புகழ் கவின் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக நடிகர் அஜித் 25 கிலோ எடை குறைக்க திட்டமிட்டு தற்போது 10 கிலோ வரை குறைத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏகே 62 படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க, நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அஜித் மற்றும் நயன்தாரா இருவரும் பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஏகே 62 படத்திற்காக இணையவுள்ளனர். மேலும் இப்படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. 'காதுவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கி முடித்துள்ள விக்னேஷ் சிவன் 'ஏகே 62' படத்தின் பணிகளை தற்போதே தொடங்கி விட்டதாகவும், இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.