
முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் தி.மு.க. சார்பில் ‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர் பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, நடிகர் வடிவேலு, நடிகர் அஜய் ரத்னம் மற்றும் நடிகை குட்டி பத்மினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வடிவேலு பேசுகையில், “தமிழ் மொழிக்கு வழக்கம் போல ஆபத்து வந்துக் கொண்டுதான் இருக்கிறது. காக்கா, கிளி, மாடு, நாய்... எல்லாமே அதனுடைய தாய் மொழியில்தான் கத்தும். யார் யார் எதை எதை கத்துக்க வேண்டுமோ கத்துகட்டும். ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தாதீங்க. எங்க நாட்டில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அடையாளமாக ஒரு கலாச்சாரம், ஒரு மொழி இருக்கு. எங்க தமிழ்நாட்டுக்கு அடையாளம் தமிழ் மொழிதான்.
ஐய்யாயிரம் ஆண்டுக்கு முன்னாடி உருவான தமிழ் மொழி எவ்வளவு வலிமையாக இருந்திருக்கும் என நினைத்து பார்க்க வேண்டும். ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி என்னிடம் அவரது மனைவி என் காமெடி வசனத்தை பார்த்துதான் தமிழ் மொழி கத்துக் கொண்டதாக சொன்னார். தமிழ் மொழியில் சின்ன சின்ன வார்தைக்ளுக்கு கூட அர்த்தம் இருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை தமிழ் மொழிக்கு எந்த கேடும் வராது. 2026 தேர்தலிலும் அவர் 200 சீட்டுக்கு மேல் ஜெயிப்பார்” என்றார்.