தமிழில் வெற்றிபெற்ற, 'காஞ்சனா' தொடர் படத்தின், முதல் பாகத்தை இந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்க, அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்திற்கு, 'லக்ஷ்மி' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. கடந்த வருடமே தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து ரிலீஸூக்குத் தயாரக இருந்த நிலையில், கரோனா அச்சுறுத்தலால் திரையரங்கில் ரிலீஸாகாமல் தள்ளிப்போனது. அதன்பின் இப்படம் ஹாட் ஸ்டாரில் இன்று இரவு வெளியாகவுள்ளது.
இந்தநிலையில், சமீபத்தில் டெல்லியில் உள்ள திருநங்கை சமூகத்தினருக்காக, இப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. அந்தச் சிறப்புக் காட்சியில் கலந்துகொண்டு, படத்தைப் பார்த்த திருநங்கைகள் உரிமை ஆர்வலர் லக்ஷ்மி நாராயண் திருப்பதி, விமர்சனங்களை நிறுத்திவிட்டு, நாம் அக்ஷய் குமாரைப் பாராட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாகப் பேசிய லக்ஷ்மி நாராயண் திருப்பதி "எந்த ஒரு திருநங்கையும், எந்த ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ சளைத்தவர்கள் அல்ல. இந்தக் கருத்தினை இப்படம் அழுத்தமாகத் தெரிவிக்கிறது. நான், இந்தப் படம் அருமையாக இருக்கிறது என நம்புகிறேன். நாம் அனைவரும் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, இப்படியொரு வலிமையான படத்தைத் தந்த, வலிமையான மனிதனான அக்ஷய் குமாரைப் பாராட்ட வேண்டும்" எனக் கூறியள்ளார். மேலும், இந்தச் சமூகத்தில் திருநங்கைகளின் உண்மையான நிலையைக் காட்டுவதே இப்படத்தின் சிறந்த விஷயம் எனவும் கூறியுள்ளார்.
லக்ஷ்மி படத்தைப் பார்த்த 60 வயது திருநங்கை கமல் குரு, "நான் இந்த திருநங்கை சமூகத்தில் பல வருடங்களாக இருக்கிறேன். இப்படத்தைப் பார்க்கையில் இரண்டு மூன்று முறை அழுதுவிட்டேன். நான் இந்தப் படம் பெரும் பாராட்டைப் பெறவேண்டுமெனக் கடவுளிடம் வேண்டுகிறேன். எனக்கு வேறெதுவும் தேவையில்லை" எனக் கூறினார்.