இந்தியாவில் தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் பெரிய நடிகர் படங்களுக்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் நாள் முதல் காட்சி தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 9 மணி சிறப்பு காட்சியுடன் வெளியான கங்குவா கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இது தொடர்பாக ஜோதிகா, “கங்குவா படத்தின் முதல் ஷோ முடியும் முன்பே இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தது அதிர்ச்சி அளிக்கிறது” எனக் குறிப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதையடுத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு சில கோரிக்கைகள் வைத்திருந்தார். அதில் “மற்ற மாநிலங்களிலும் சிறப்புக் காட்சிகளை 9 மணிக்கே ஆரம்பிக்க வேண்டும். படம் வெளியாகிய இரண்டு வார காலத்துக்கு படத்தை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் படங்களை அதிகாலையிலேயே பார்த்துவிட்டு, தமிழகத்தில் திரைப்படம் போடப்படுவதற்கு முன்னரே விமர்சனம் என்கிற பெயரில் யூடியூப் மூலமாக காலி செய்கின்றனர். தியேட்டர் வளாகங்களில் ரசிகர்களின் கருத்து என யூடியூப்பர்கள் வீடியோ எடுப்பதை அனுமதிக்கக் கூடாது” என ஆடியோ வெளியிட்டார்.
இந்த நிலையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் படக்குழுவினர் மீது தனிப்பட்ட தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது ஆனால் அது திரைப்படத்தை பற்றி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர். கதாநாயகன் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கும் வன்மத்தை பொதுவெளியில் கக்க ஒரு கருவியாக திரைப்பட விமர்சனத்தை சில ஊடகங்கள் சமீப காலங்களில் பயன்படுத்தி வருவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். திரைத்துறை விமர்சகர்கள் தராசு போல ஒரு திரைப்படத்தின் நிறை குறைகளை சொல்லி, மொத்தத்தில் தங்களின் அபிப்பிராயத்தை சொல்லலாமே தவிர அதை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் விதத்தில் கடுமையாக விமர்சனம் செய்து, தனிமனித தாக்குதல்களும் செய்வது. திரைப்பட துறையை மொத்தமாக அழிக்கும் செயலாக நமது சங்கம் கருதுகிறது அவ்வாறு செய்து வரும் ஊடகவியலாளர்கள் மீது தனது கண்டனத்தை நமது சங்கம் தெரிவிக்கிறது.
ஒரு திரைப்படத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை அனைவரின் கருத்தாக மக்களிடம் கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும் ஒரு திரைப்படத்தை மூன்று மணி நேரம் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்காமல், அது ஏதோ மொத்த சமுதாயத்திற்கும் அநீதி விளைவித்தது போல பலர் பேசி வருவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கருதுகிறோம். விமர்சகர்களுக்கு திரைப்படங்களை விமர்சனம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது ஆனால் தனிப்பட்ட காழ்புணர்ச்சியின் காரணமாக ஒரு திரைப்படத்தை பற்றிய வெறுப்பை ஊடங்களில் விதைக்க கூடாது என்பதை அனைத்து ஊடகவியலாளர்களும் மனதில் வைத்து திரைப்பட விமர்சனங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்
இனிமேலாவது தங்களை திருத்தி கொண்டு, சரியான முறையில் விமர்சனங்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதே சமயம், திரையரங்குகளுக்கு வெளியே, திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன், பார்வையாளர்களின் கருத்துக்களை பதிவு செய்து வரும் பல யூட்யூப் சேனல்கள் எல்லை மீறி கருத்துக்களை சொல்லும் பார்வையாளர்களை ஊக்குவித்து, அதை தொடர்ந்து வெளியிட்டு, அதிக அளவில் அத்தகைய கருத்துக்களை, ஏதோ அனைத்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உலக அளவில் அதை எடுத்து செல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. சமீபத்தில் கங்குவா திரைப்படத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் ஒரு பெரியவர், ஒரு திரையரங்குக்கு வெளியே தனிமனித தாக்குதல்களும், வன்மத்தை கக்கியதும், அனைவரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அத்தகைய கருத்துக்களை பதிவு செய்து மக்களிடம் அதை பெரிய அளவில் கொண்டு சென்ற யூட்யூப் சேனல்களை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, உணவு நன்றாக இல்லாத பட்சத்தில், வெளியே வந்து அந்த ஓட்டல் பற்றி ஊடங்களில் ஏதோ தன் வாழ்க்கையே அதனால் நாசமானது போல யாரவது பேசி இருக்கிறார்களா? அவ்வாறு பேசி இருந்தால், அந்த ஓட்டல் தான் சும்மா விட்டிருப்பார்களா? ஓட்டல் மட்டுமில்லை. எந்த பொருளை வாங்கும் அல்லது உபயோகிக்கும் இடத்தில், அது பிடிக்காத பட்சத்தில், அதை நாகரிகமாக எடுத்து சொல்லி அதற்கான தீர்வை காண்பார்களே தவிர ஊடங்களில் அது பற்றி மோசமாக பேசி, அந்த ஒட்டலையோ, விற்பனை அங்காடியையோ, சேவை மையத்தையோ எவரும் வசைபாடி, பேசி நாம் பார்த்ததில்லை. திரையரங்குகளுக்கு வெளியே இவ்வாறு பார்வையாளர்களின் கருத்தை கேட்டு யூட்யூப் சேனல்களில் பதிவு செய்யும் முறை வந்த பின், பல பார்வையாளர்கள் இத்தகைய விடியோக்கள் மூலம் பிரபலம் அடைய தன்னை திரைத்துறை மேதாவியாக நினைத்து பேசி வருவதும், ஏதோ அத்திரைப்படம், அவரின் மொத்த நிம்மதியையே குலைத்து விட்டது போல பேசி பிரபலம் அடைய முயற்சிக்கிறார்கள்.
அவ்வாறு அவர்கள் பேசுவது எத்தகைய பாதிப்பை அத்திரைப்படத்திற்கு ஏற்படுத்தும் என்பதை நன்கு உணர்ந்தும் பல யூட்யூப் சேனல்கள் அவைகளை ஊக்குவித்து வருகின்றன. எந்தவித எடிட்டிங்கும் செய்யமால் அத்தகைய கருத்துக்களை உடனுக்குடன் வெளியிட்டு பிரபலப்படுத்துகின்றன. சினிமா துறையை ஒட்டுமொத்தமாக அழிக்கும் இந்த செயல்களை உடனே தடுத்து நிறுத்து வேண்டிய கட்டாயம் திரைத்துறையை சார்ந்த அனைவருக்கும் உள்ளது. தமிழ் நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அறிவித்தது போல, திரையரங்கு வளாகம் மட்டுமில்ல, அதற்கு அருகிலும், எந்த யூட்யூப் சேனலும் பார்வையாளர்கள் ரசிகர்களிடம் இனிமேல் புதிய திரைப்படங்களை பற்றி பேட்டி எடுக்க தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் அனுமதிக்க கூடாது.
பப்ளிக் ரிவியூவ் என்கிற பெயரில் பார்வையாளர்களை திரைப்படங்கள் மீதும் அதில் சம்பந்தபட்டவர்கள் மீதும் வன்மத்தை கக்கும் மனிதர்களாக மாற்றும் இந்த போக்கை உடனே தடை செய்யுமாறு அனைத்து திரையரங்க உரிமையாளர்களையும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம். மேற்கொண்டு, திரைப்படங்களை தார்மீக முறையில் விமர்சிக்காமல், தனிமனித தாக்குதல்கள், வன்மத்தை கக்குதல் போன்ற செயல்களை ஊடகங்கள் மூலம் செய்யும் நபர்கள் ரசிகர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க நமது சங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கவிருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம். பார்வையாளர்கள், ரசிகர்கள், தங்களின் இத்தகைய வன்மம் மிகுந்த கருத்துக்கள், எவ்வாறு பெருமளவில் பாதிப்பை திரைத்துறைக்கு ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்து. பொறுப்பான முறையில் விமர்சனங்களை இனிமேலாவது சொல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
இந்த 2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு பப்ளிக் ரிவியூவ் மூலம் பெருமளவில் பாதிப்பை யூட்யூப் சேனல்கள் ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த யூட்யூப் சேனல்களும் எடுக்க தடை செய்து, இந்த முதல் நாள் முதல் காட்சி, பப்ளிக் ரிவியூவ் நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.