சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜாலியோ ஜிம்கானா. டிரான்ஸ் இந்தியா மீடியா தயாரித்துள்ள இப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். இப்படத்தில் மடோனா செபாஸ்டியன், யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, ரோபோ சங்கர், அபிராமி, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தில் இருந்து வெளியான ‘போலீஸ்காரன கட்டிக்கிட்டா...’ பாடல் வரிகள் இரட்டை அர்த்தமாக இருப்பதாக சர்ச்சை எழுந்தது. மேலும் இந்தப் பாடலை ஜெகன் கவிராஜ் எழுதியதாக சொல்லப்படும் நிலையில் பாடலின் லிரிக் வீடியோவில் படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரம் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனால் யார் பாடல் எழுதினார் என்ற கேள்வியும், ஜெகன் கவிராஜின் உழைப்பை சக்தி சிதம்பரம் திருடிவிட்டாரா என்றும் சர்ச்சைகள் உருவானது.
இந்த நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பாடல் தொடர்பாக படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்காமல் சக்தி சிதம்பரம் பாதியிலேயே வெளியேறினார். பின்பு நிகழ்ச்சிக்கு வந்த ஜெகன் கவிராஜ் மேடை ஏறி “இந்தப் படத்திற்கு முதலில் இசையமைப்பாளராக சாம் சி.எஸ் இருந்தார். அவருக்கும் இயக்குநருக்கும் செட் ஆகாததால் அவர் வெளியேறிவிட்டார். ‘போலீஸ்காரன கட்டிக்கிட்டா...’ பாடல் உருவான விதத்தை சொல்கிறேன். சிவப்பு சூரியன் படத்தில் சில்க் ஸ்மிதா ‘நான் கண்டா கண்டா...’ பாடலுக்கு நடனமாடியிருப்பார். அதில் ‘போலீஸ்காரன கட்டுனா அடிப்பான், டாக்டர கட்டுனா...’ போன்ற வரிகள் வரும். அதே சமயம் மலையாளத்தில் ஹிட்டான ஒரு பாடலின் ட்யூனை இசையமைப்பாளருக்கு அனுப்பினோம். என்னுடன் இயக்குநர் சக்தி சிதம்பரம், இணை இயக்குநர் காமராஜ் என்பவர் இருந்தார். காமராஜ் தான் இந்தப் பாடல் உருவாகுவதற்கு மூல காரணம்.
அந்த மலையாளப் பாடலை இன்ஸ்பிரஷேனாக எடுத்துக் கொண்டு எங்க படத்தின் இசையமைப்பாளர் ஒரு ட்யூன் கொடுத்தார் அந்த ட்யூனுக்கு வார்த்தை எழுதினேன். எழுதும் போது இயக்குநர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். தட்டகாரத்தில் நான் வார்த்தைகள் எழுதினேன். இயக்குநர் சில உதவிகள் செய்தார். நான் எப்போதுமே பாட்டு எழுதி முடித்த பின் நேரடியாக இசையமைப்பாளரிடம் கொடுக்க மாட்டேன். இயக்குநர் வழியாகத்தான் அது போகும். அப்படி இயக்குநர் வழியாகத்தான் இந்த பாட்டு வரிகள் இசையமைப்பாளருக்குப் போனது.
பாடல் உருவாகி வந்த சமயத்தில் ஒரு பிரச்சனை வந்தது. படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் நான் வேலை செய்தேன். படத்தின் பட்ஜெட் ரூ.8 கோடியில் ஆரம்பித்து ரூ.15 கோடியை கடந்து போனது. அதை தயாரிப்பாளரிடம் சொன்னேன். அதனால் இயக்குநர் பாடலில் என் பெயரை போட மாட்டேன் என சொல்லிவிட்டார். தயாரிப்பாளர் சொல்லியும் இயக்குநர் கேட்கவில்லை. இதை நான் அப்போது வெளியில் சொல்லாததற்கு காரணம் இயக்குநர் படத்தின் அடுத்தகட்ட வேலைகளை செய்ய மாட்டார். ஏற்கனவே ரூ.15 கோடி செலவு பண்ணியிருக்கிறோம். வியாபாரம் பிரச்சனை இருக்கிறது என்பதற்காக அமைதியாக இருந்தேன். ஆனால் இன்றைக்கு உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது” என்றார்.