கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் பாலிவுட்டில் வந்திருக்கிறது. குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை கதையை வைத்து 'எம்.எஸ்.தோனி: தி அண்டோல்டு ஸ்டோரி' என்ற பெயரில் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 'சச்சின்: அ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற பெயரில் சச்சின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்கப்பட்டது. ஆவணப்படமாக இருந்தாலும் திரையரங்குகளில் சச்சின் என்ற ஒரு மாஸ்டர் பிளாஸ்ட்டருக்காக ரசிகர்கள் குவிந்தனர்.
அந்தவகையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மித்தாலி ராஜின் வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்கள் கிரிக்கெட்டை மட்டுமே ரசித்து பார்த்து வந்தவர்களை கடந்த மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இவர் தலைமையிலான அணியிலான ஆட்டத்தின் மூலம் பார்க்க வைத்தவர் மித்தாலி ராஜ் என்று சொல்லலாம். ஆனால், இறுதிப்போட்டி வரை தனது தலைமையிலான அணியை கொண்டு வந்து தோல்வியை தழுவினார்.
இந்நிலையில் இவரின் வாழ்க்கை வரலாறு படத்தை 'சபாஷ் மித்து' என்ற பெயரில் இயக்குநர் ஸ்ரீஜித் முக்கர்ஜி இயக்கி வருகிறார். இப்படத்தில் மித்தாலி ராஜாக டாப்சி பன்னு நடித்து வரும் நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.