
ஜம்மு காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பஹல்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் புகைப்படங்களைக் கண்டறிந்து அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தக்குதலுக்கு எதிராக இந்திய அரசியல் தலைவர்கள் அல்லாது உலக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திரைப் பிரபலங்களும் தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மஞ்சு வாரியர், ரவி மோகன், ஆண்ட்ரியா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இரங்கல்களைத் தெரிவித்திருந்திருந்தனர். இதன் வரிசையில் தற்போது சூர்யா, “மனம் நொறுங்கிவிட்டது மற்றும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாருக்கும் இது போல் இனி நடக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினர்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். இந்தியா எப்போதும் ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருக்கும். அமைதிக்கான பாதையை உருவாக்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Heartbreaking and deeply shocking. No one should have to face this again. Praying for the victims and their families. India will stay united and stronger. May a lasting path to peace emerge.#PahalgamTerroristAttack— Suriya Sivakumar (@Suriya_offl) April 23, 2025