
ஓ.டி.டி. மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் ஆபாச சினிமாக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ஓடிடி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் ஆபாச திரைப்படங்கள், இணையத் தொடர்கள், விடியோக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த படங்களை தணிக்கை செய்ய நிபுணர் குழு தேவைப்படுகிறது. தேசிய உள்ளடக்க கட்டுப்பாட்டு ஆணையம் இது தொடர்பாக விதிகள் வகுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் சமூக ஊடக தளங்களில் வீடியோக்கள் உள்ளதாக தெரிவித்து இது தொடர்பான ஆவணங்களை சமர்பித்தார்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக நெட் ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட அனைத்து சம்பந்தப்பட்ட ஓ.டி.டி. நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகங்களும் பதிலளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசும் இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.