Skip to main content

“தமிழகத்தைப் பொறுத்தவரை மதவாதம் உள்ளே நுழைய முடியாது” - முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி!

Published on 28/04/2025 | Edited on 28/04/2025

 

CM MK Stalin is confident Religion cannot enter TN

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை இன்று (28.04.2025) நடைபெற்றது. அப்போது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டுப் பதிலளித்துப் பேசுகையில், “வானதி சீனிவாசன் ஆடிட்டர் ரமேஷ் தொடர்பான கொலை பற்றிக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அந்தக் கொலை என்பது அதி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடந்தது. அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேபோன்று, காஷ்மீரில் நிகழ்ந்தது போன்று நடக்கக்கூடாது என்று இங்கே பேசியிருக்கிறார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அதுபோன்று நிச்சயமாக நடைபெறவே நடைபெறாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

காஷ்மீரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாகப் பேசும்போதுகூட, ஒன்றிய அரசினுடைய பாதுகாப்பு குறைபாடு பற்றி இதுவரை நாங்கள் பேசவில்லை. நான் அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், நான் தெளிவாகக் குறிப்பிட்டது என்னவென்று கேட்டால், காஷ்மீர் தொடர்பான பிரச்சினையைப் பொறுத்தவரையிலே, ஒன்றிய அரசு எடுக்கக்கூடிய எந்த நடவடிக்கையாக இருந்தாலும், தமிழ்நாடு நிச்சயமாக உறுதுணையாக இருக்கும் என்றுதான் நாங்கள் சொல்லியிருக்கிறோம். எனவே, எந்தக் காரணத்தைக்கொண்டும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மதவாதம், உள்ளே நுழைய முடியாது, முடியாது, முடியாது என்பதை நான் தெளிவோடு சொல்லிக் கொள்கிறேன்.

அடுத்து, தமிழ்நாட்டை முன்னேறிய நாட்டுடன் (developed nation) ஒப்பீடு செய்ய வேண்டுமென்று பேசினார். அதற்காக வானதி சீனிவாசனுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது பாராட்டுக்கு நன்றி. அதேநேரத்தில், தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசினுடைய நிதி வராமல் இருக்கின்ற செய்தி உங்களுக்குத் தெரியும். இது முன்னேறிய நாட்டின் (developed nation) அளவிற்கு ஒப்பிட வேண்டுமென்று சொன்னால், இன்னும் பல திட்டங்களை நிறைவேற்றுவதற்குக் காத்திருக்கிறோம், தயாராக இருக்கிறோம். எனவே, தயவுசெய்து தலைமையிடத்திலே சொல்லி, அந்த நிதியைப் பெற்றுத் தருவதற்கான குரலைக் கொடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்