![sundeep kishan hotel issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/ehYhsJ16TZn8griMp_GpSGYZNkka67huprWlIBEFsfk/1722084040/sites/default/files/inline-images/275_9.jpg)
தெலுங்கில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் சந்தீப் கிஷன். தமிழில் மாநகரம், மாயவன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் தனுஷ் நடிப்பில் நேற்று (26.07.2024) வெளியாகியுள்ள ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
திரைப்படங்களில் நடிப்பதைத் தாண்டி ‘விவாஹா போஜனம்பு’ என்ற பெயரில் உணவகத்தையும் நடத்தி வருகிறார். இந்த உணகவம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் இருக்கிறது. இந்த உணவகங்கள் ஒன்றில் தெலங்கானாவின் உணவுப் பாதுகாப்பு ஆணையர் குழு சமீபத்தில் ஆய்வு நடத்தியது. அப்போது, காலாவதியான சிட்டிமுடியாலு அரிசி இருப்பதாகவும், பாத்திரங்களில் இருந்த மூல உணவுப் பொருள்கள், அரைக்கப்பட்ட உணவுகள் சரியாக மூடப்படவில்லை எனவும் சில விதிமீறல்கள் செய்துள்ளதாக ஆணையர் குழு தெரிவித்தது.
இதையடுத்து, “விவாஹா போஜன உணவகம் கடந்த 8 ஆண்டுகளாக நேர்மையுடன் செயல்பட்டு, விசுவாசமான வாடிக்கையாளர்களை உருவாக்கியிருக்கிறது. கண்டுபிடிக்கப்பட்ட காலாவதியான அரிசி மூட்டை விற்பனையாளரிடமிருந்து பெறப்பட்ட மாதிரி அரிசி” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து மீண்டும் அவர் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலில் கூறப்பட்டது, “விவாஹா போஜனம்புவின் ஏழு கிளைகளில், ஒரு நாளுக்கு 50 உணவுப் பாக்கெட் வழங்குகிறோம். ஏழு கிளைகளில் நாளுக்கு 350 இலவச உணவுப் பாக்கெட் தயாரிக்கப்படுகிறது. ஒரு பாக்கெட்டிற்கு ரூ.50 செலவாகும் என்றால், அது ஒரு மாதத்திற்கு ரூ. 4 லட்சத்திற்கும் அதிகமாக ஆகும். ரூ.4 லட்சம் மதிப்பிலான உணவை இலவசமாக வழங்கும் நாங்கள், கம்மி விலையில் இருக்கும் அரிசி மூட்டையை சேமிப்பதில் ஏன் ஈடுபட வேண்டும்” என்று சந்திப் கிஷன் பேசியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.