![gesgs](http://image.nakkheeran.in/cdn/farfuture/bOwMRIk54jCho8AywjisXLVW5Yn-b3kO0B1wJ07q2z0/1590817273/sites/default/files/inline-images/108207.jpg)
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் நடிகர் சௌந்தர ராஜா கரோனாவால் வேலையின்றி கஷ்டப்படும் கிராமிய மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
''தமிழ் கலாச்சாரத்தோடு மக்களை சந்தோசப்படுத்தும் கிராமிய மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்க்கை கரோனா ஊரடங்கினால் மிகவும் பாதித்து உள்ளது. அடுத்த வரக்கூடிய ஆறு மாதங்களுக்கும் சுப காரியங்கள், கோவில் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகள் இல்லாத காரணத்தால் தமிழக முதல்வர் திரு எடப்பாடி.கே. பழனிச்சாமி அய்யா, பாதிக்கபட்ட நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவ வேண்டும் எனத் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். சமூக ஆர்வலர்கள் விருப்பமிருந்தால் நீங்களும் உதவுங்கள். நாங்களும் நடிகர் சங்கம் மூலமாக எங்களால் இயன்ற உதவிகளைச் செய்து இருக்கிறோம்'' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.