சிவகார்த்திகேயன் நடிப்பில் 'இன்று நேற்று நாளை' ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உருவாகி வரும் படம் 'அயலான்'. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் 'வேற லெவல் சகோ' கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது.
அந்தாண்டே படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சார்ந்த காட்சிகள் நிறைய உள்ளதால் சி.ஜி. பணிகளுக்கு அதிக நாள் தேவைப்படுகிறதாகவும், இதன் காரணத்தால் படம் வெளியாவதில் தாமதமாகிறது எனவும் படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால் இந்தாண்டு தொடக்கத்தில் இன்னும் படப்பிடிப்பு இருப்பதாக கூறி மீண்டும் படப்பிடிப்பை படக்குழு தொடங்கியதாக கூறப்பட்டது. இதையடுத்து இந்தாண்டு மத்தியில் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டது.
இதனை தொடர்ந்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாத நிலையில் நேற்று ஒரு அறிக்கை வெளியானது. அதில், "இப்படம் பான்-இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது. திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக 'அயலான்' இருக்கும். இப்படம் மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு செல்ல தயாராகுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இன்று (24.04.2023) காலை 11.04 மணிக்கு ஒரு முக்கியமான அப்டேட் வெளியாகும் என தெரிவித்தது.
படக்குழு குறிப்பிட்டது போல் இன்று காலை 11.04 மணிக்கு அயலான் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது. அதனை குறிப்பிட்டு புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் சிவகார்த்திகேயனும் படத்தின் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரமும் இடம்பெற்றுள்ளது. நீண்ட வருடங்களாக இப்படத்தின் ரிலீசுக்காக காத்திருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுபோக இப்போஸ்டரை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.