Skip to main content

பாஜக புகார் - சிக்கலில் தனுஷ் படக்குழு

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
shooting permission cancelled in tirupathi for dhanush 51 movie

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது பட பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இதை தவிர்த்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். மேலும் ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம் தனுஷின் 51வது படமாக உருவாகிறது. படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கத் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாக அர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. அதன்படி திருப்பதி அலிபிரி பகுதியில் நேற்று மலையடிவாரத்தில் படப்பிடிப்பு நடந்த நிலையில் திருமலைக்கு செல்லும் பக்தர்கள், மாற்று பாதைக்கு காவல்துறையினரால் மாற்றப்பட்டனர். ஆனால் அந்த பாதை குறுகிய பாதை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனர். கிட்டத்தட்ட 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் காவல்துறையினர் மற்றும் பவுன்சர்களிடம் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனிடையே படப்பிடிப்பிற்கு தடை விதிக்கக்கோரி பாஜகவினர் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து படப்பிடிப்பிற்காக வழங்கப்பட்ட அனுமதியை, போக்குவரத்து இடையூறு, பக்தர்களின் மனநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு காவல்துறை ரத்து செய்துள்ளது. இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த முடியவில்லை என சிக்கலில் இருக்கும் படக்குழு தற்போது புது லொகோஷனை தேடி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2021ல் படத்தை அறிவித்த படக்குழு, இரண்டு வருடங்கள் கழித்து சமீபத்தில் தான் படப்பிடிப்பு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்