பிரபல தமிழ் நாளிதழில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன்(வயது 90) முதுமை காரணமாக இன்று (03-05-2024 ) காலை 10.30 மணிக்கு காலமானார். இவரது இறுதிச் சடங்குகள் நாளை (04-05-2024) காலை 8 மணி அளவில் சென்னை முகப்பேரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன் மறைவையொட்டி அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சண்முகநாதன் மறைவு தமிழ் இதழியல் உலகுக்குப் பெரும் இழப்பாகும்” எனக் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, கவிஞர் வைரமுத்து, அவரது எக்ஸ் தளத்தில், “முதுபெரும் பத்திரிகையாளர். 70 ஆண்டுகளை இதழியல் துறைக்கே அர்ப்பணித்தவர். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரால் வார்க்கப்பட்டு வளர்க்கப்பட்டவர். அவர் மறைவு பத்திரிகைத் துறையின் கட்டைவிரல் ஒடிந்ததுபோல் வலிக்கிறது. தினத்தந்திதான் அவருக்குக் குடியிருந்த கோயில் தான்பெற்ற கல்வி, எழுத்தாற்றல் உடல்வலிமை எல்லாவற்றையும் பத்திரிகைத் துறைக்கே பயன்படுத்தியவர்.
தினத்தந்தியின் மொழிநடையை முன்னெடுத்துச் சென்ற முன்னோடிகளுள் ஒருவர் பல படைப்புகளைப் படைத்த நாவலாசிரியர் 'வரலாற்றுச் சுவடுகள்' என்ற அழிக்கமுடியாத ஆவணத்தின் ஆசிரியர். அவர் எழுதிய 'உலக வரலாறு' மரணத்தை வெல்வதற்கு அவர் படைத்துக்கொண்ட பனுவல் ஆகும். தமிழக அரசின் கலைஞர் எழுதுகோல் விருதுபெற்ற பெருமை பெற்றவர். என்னை வளர்த்தவர்களுள் அவரும் ஒருவர். அவர் உடல் ஓய்வுறுக, புகழ் என்றும் நின்று நிலவுக ஆழ்ந்த இரங்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.