![hdhdbd](http://image.nakkheeran.in/cdn/farfuture/w4yfLiakRLu7UmvMZpDnaA4pSA2pkPHS0BrJnAWV8pY/1623055053/sites/default/files/inline-images/dhanush_santhosenarayanan_23217_m.jpg)
தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவெடுத்தது. இதனையடுத்து, ‘ஜகமே தந்திரம்’ படம் வருகிற 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பை படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி, ‘ஜகமே தந்திரம் படத்தின்’ இசை ஆல்பம் இன்று (ஜூன் 7) வெளியாகியுள்ளது. இந்த ஆல்பத்தில் 8 பாடல்களும் 3 தீம் மியூசிக்குகளும் இடம்பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் இசை ஆல்பம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியுள்ளார். அதில்...
"இப்படத்தின் ஒவ்வொரு பாடலையும் ஸ்டுடியோவில் மிகப்பெரும் உழைப்பில் அதிக நேரத்தை செலவழித்து உருவாக்கினோம். இசையில் நான் நினைத்த பல விஷயங்களை செய்து பார்க்கும் சுதந்திரம் இப்படத்தில் கிடைத்தது. இப்படத்தின் பாடல் உருவாக்கம் மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. ‘ரகிட ரகிட’ பாடல் வெளியானபோது பலர் தங்களை மன அழுத்தத்திலிருந்து அப்பாடல் மீட்டதாக கூறியது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. இப்போது நெட்ஃப்ளிக்ஸ் தளம் உலகெங்கிலும் மொத்த ஆல்பத்தை வெளிக்கொண்டுவரும் நிலையில், மற்ற பாடல்களையும் இதேபோல் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். ‘ஜகமே தந்திரம்’ படத்தின் வெவ்வேறு கட்டத்தை இப்படத்திலுள்ள 8 பாடல்களும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது" என கூறியுள்ளார்.