நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஜி.பி.ஆர்.கே. சினிமாஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி, அனன்யா நடித்துள்ள படம் திரு.மாணிக்கம். இப்படத்தில் நாசர், தம்பி ராமையா, பாரதிராஜா, கருணாகரன், இளவரசு போன்ற நடிகர் பட்டாளம் நடித்துள்ள நிலையில் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரஜினி முதல் பல்வேறு பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டினர். மேலும் கடந்த 24ஆம் தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி அதிலும் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு நன்றி தெரிவித்து பேசினர். மேலும் பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதில் அளித்தனர். அப்போது சமுத்திரக்கனியிடம் மிஷ்கின் ஆபாசமாக பேசி பின்பு மன்னிப்பு கேட்டது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு சற்று கோபமாக பதிலளித்தார். அவர் பேசியதாவது, “அவர்தான் மன்னிப்பு கேட்டுவிட்டார். அதற்கான விளக்கமும் கொடுத்துவிட்டார். அவர் ரொம்பவே எமோஷ்னலான மனிதர். என்னைக் கூட முதலில் கெட்ட வார்த்தை சொல்லி பின்பு வாடா சொல்லி அடுத்து முதுகில் இரண்டு அடி அடித்து அப்புறம் தான் பேசுவார். அன்பின் உச்சத்தில் சில விஷயங்களை வெளிப்படுத்துவார். அப்படித்தான் அவர் பேசியதை பார்த்தேனே தவிர எந்த இடத்துலையும் அவரை தவறாக பார்க்கவில்லை.
பேசி முடித்தவுடன் வெற்றிமாறனுடன் அவர் ஃபோன் பேசினார். அப்போது நான் அருகில் தான் இருந்தேன். பின்பு கான்ஃபிரன்ஸ் காலில் அமீரிடமும் பேசினார். அப்போது என்ன நடந்தது என்று எனக்கு தெரியும். நம்ம ஊருக்கு போனால் கூட கெட்ட வார்த்தை தான் ரொம்ப அன்பான சொல். ஆனால் அதை எல்லா இடத்திலும் சொல்ல முடியாது. மிஷ்கினுக்கு அன்பு அதிகமாக இருப்பதால் அப்படி பேசிவிட்டாரென எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி அவர் பேசியதை யாரும் பேசவில்லையா. மிஷ்கின் பேசியதை தவறு என நான் ஒற்றுக்கொள்ள மாட்டேன். அவர் இருகரம் கூப்பி மன்னிப்பும் கேட்டுவிட்டார். அவரைப் பற்றி புரிந்தவர்களுக்கு அவர் யார் என்று தெரியும். புரியாதவர்களுக்குத் தான் அந்த மன்னிப்பு. எங்க அண்ணனுக்காக நானும் உங்கள் காலைத் தொட்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.