![Saipallavi delights fans on her birthday](http://image.nakkheeran.in/cdn/farfuture/uMvC2XnxARjwXLcxwf3WCaVSS6xhFJ7EvpPmAgOKHkk/1652093879/sites/default/files/inline-images/Untitled-4_12.jpg)
2015-ல் மலையாளத்தில் வெளியான 'ப்ரேமம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படத்தில் 'மலர்' கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்து பிரபலமானார். தமிழில் 'என்ஜிகே', 'மாரி 2' படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், தமிழ் மொழிகளில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'ஷியாம் சிங்க ராய்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்து ராணா டகுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'விரத பர்வம்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஜூலை மாதம் 1-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சாய் பல்லவி தனது 30-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்தநாளன்று ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக போஸ்டர் ஒன்றையும் கிளிம்ஸ் விடியோவையும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 'கார்கி' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை கவுதம் ராமசந்திரன் இயக்குகிறார். இந்த படத்தில் சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட நான்கு பேர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.