![Saif Ali Khan paparazzi issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/KL1HTaZ33wqs8s2SCsA1cRQTTbXlLM2giTZ9CauJN6k/1678085439/sites/default/files/inline-images/157_19.jpg)
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் தற்போது பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தில் நடித்து வருகிறார். ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சைஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படம் வருகிற ஜூன் 16 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், புகைப்படக் கலைஞர்களை சைஃப் அலிகான் கடுமையாக விமர்சித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் தனது மனைவி கரீனா கபூருடன் ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவரது வீட்டிற்கு திரும்பினார் சைஃப் அலிகான். அவருக்காக அங்கு காத்திருந்த புகைப்படக் கலைஞர்கள், அவர்கள் வந்ததும் அவர்களை புகைப்படம் எடுத்துக்கொண்டே பின்தொடர் முயன்றனர். அதனைப் பார்த்து கோபப்பட்ட சைஃப் அலிகான், "நீங்கள் ஒன்னு செய்யுங்க, எங்க பெட்ரூம் வந்துடுங்களே" எனக் கூறினார்.
இது தொடர்பாக சைஃப் அலிகான், "எல்லையை மீறி நடந்து கொள்கிறார்கள். வாசல் வழியாக புகுந்து, காவலாளியை தாண்டி, 20 கேமராக்களையும், லைட்டுகளையும் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுக்கின்றனர். இது சரியானதா... மிகவும் தவறான செயல். நாங்கள் எப்போதும் வெளியில் வரும்போது புகைப்படக் கலைஞர்களுடன் ஒத்துழைக்கிறோம். அவர்களைப் புரிந்துகொள்கிறோம். ஆனால், ஒருவரின் வீட்டின் உள்ளே பின்தொடர்வது தவறான செயல்" எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஆலியா பட், தான் வீட்டினுள் இருக்கும் போது யாரோ இரண்டு ஆண்கள் தன்னை அனுமதியின்றி புகைப்படம் எடுத்துள்ளதாக அவர்களை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.