'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டி.வி.வி. நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. 'பாகுபலி' படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் ராம்சரணின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் படத்தில் அவருடைய கதாபாத்திரமே எப்படி இருக்கும் என்பதை ரசிகர்களுக்குக் காண்பிக்கும் அளவிற்கு ஒரு நிமிடத்தில் டீஸர் போல வீடியோ வெளியிட்டது படக்குழு. அதுமட்டுமல்லாமல், அந்த வீடிவோவிற்கு வாய்ஸ் கொடுத்தவர் ஜூனியர் என்.டி.ஆர்.
இதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாள் வருகிறது. இதற்கும் வீடியோ ரிலீஸாகும் என்று நினைத்தவர்களுக்கு முன்பே படக்குழு, லாக்டவுன் காரணமாக ஜூனியர் என்.டி.ஆருக்கு டீஸர் வெளியிட முடியாது என்று அறிவித்திருந்தது.
மீண்டும் இதை உறுதிப்படுத்தும் வகையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ ட்விட்டரில் பக்கத்தில், “லாக்டவுன் நீட்டித்துக்கொண்டே செல்வதால், அனைத்து வேலைகளும் போட்டது போட்டபடியே உள்ளது. இருந்தபோதிலும் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளுக்கு க்ளிம்ஸ் தயார் செய்ய நினைத்தோம். ஆனால், அதை முடிக்கமுடியவில்லை. அதனால், ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு எந்த லுக்கும், வீடியோவும் ரிலீஸாகது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
பெயருக்காக எதையாவது வெளியிட வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. உங்களுடைய காத்திருப்பு வீண்போகாது என்பதற்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம். எது எப்போது வெளியிடப்பட்டாலும், நம் அனைவருக்கும் கொண்டாட்டமானதாக இருக்கும் என்பதில் உறுதியுடன் உள்ளோம்” என்று ட்வீட் செய்துள்ளனர்.