பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் படம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சுமார் 400 கோடியில் உருவாகும் இப்படத்தில், பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது இந்த வருட ஜூன் மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது கரோனா வைரஸ் பரவலால் இப்படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வருட சங்கராந்தியை குறி வைத்து ரிலீஸ் செய்ய திட்டமிடபட்டுள்ளது. இதற்கிடையே இந்தப் படத்தைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் அடுத்து உருவாகும் படம் குறித்து பல்வேறு தகவல்கள் சமீபத்தில் கசிந்த வண்ணம் இருந்த நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்குப் பிறகு, துர்கா ஆர்ட்ஸ் தயாரிப்பில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளதாக ராஜமெளலி தற்போது அறிவித்துள்ளார். இப்படத்தின் மற்ற அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.