சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த நவம்பர் மாதம் மதுரையில் தனத் ரசிகர்களை கூட்டி புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளார் என்று சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் ரஜினிகாந்தின் புதிய கட்சி குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில், “நண்பர்களே, ரசிகர்களே, இன்று ஒரு முக்கியமான விஷயம் பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன். கடந்த மாதம், அரசியலுக்கு வராமலும் நாம் சேவை செய்யலாம் என்று பதிவிட்டிருந்தேன். இதோ அதற்கான காரணம்.
நான் பல சமூக பணிகளைச் செய்து வருவதால், என் நண்பர்கள், ரசிகர்கள், ஊடக நண்பர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்பதால்தான் அதையெல்லாம் செய்கிறேனா என்று கேட்கின்றனர். இன்னும் சிலர், நான் அரசியலுக்குள் நுழைந்தால் இதை விட அதிகமாகச் சேவை செய்யலாம் என்கின்றனர். அதிலும் குறிப்பாக கோவிட் நெருக்கடி சமயத்தில் செய்த பணிகளுக்குப் பிறகு இந்த அழுத்தம் கூடிவிட்டது.
நான் சாதாரண ஆள். என் வீட்டில், குழந்தைகள் காப்பகம் ஆரம்பித்து அதன் மூலம் என் சேவையைத் தொடங்கினேன். எப்போதெல்லாம் உதவி தேவைப்பட்டதோ அப்போது அரசாங்கத்திடம் கோரியிருக்கிறேன். எல்லோருமே எனக்கு சிறந்த ஆதரவைத் தந்திருக்கின்றனர். கலைஞர் ஐயா, ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பல இதய அறுவை சிகிச்சைகளுக்கு உதவியுள்ளனர். மேலும் ஜெயலலிதா அம்மா, எடப்பாடி கே பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் ஆகியோரும் பல்வேறு சேவைகளில் எனக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
ஒரு தனியாளாக நான் செய்யும் சேவையை விட அரசியலில் நுழைந்தால் அதிகம் சேவை செய்யலாம் என்பது எனக்கு தெரியும். ஆனால், நான் அரசியலுக்குள் நுழையாத ஒரே காரணம், அரசியலுக்கு வந்தால் இன்னொருவரைப் பற்றி தவறாக பேச வேண்டும். எனக்கு இந்த எதிர்மறை அரசியல் பிடிக்காது. ஏனென்றால் நான் அனைவரையும் மதிக்கிறேன். இதேதான் என் அம்மாவின் கருத்தும் கூட.
யாராவது ஒரு கட்சி தொடங்கி, அதில் எதிர்மறை அரசியல் வேண்டாம், யாரைப் பற்றியும் தவறாகப் பேசி புண்படுத்த வேண்டாம் என்ற நிலை வந்தால் அப்போது நான் அவர்களுடன் சேர்ந்து, பொதுச் சேவையில் என் பங்கைச் செய்வேன். இந்தியாவில் அப்படி ஒரு நேர்மறை அணுகுமுறையுடைய கட்சியை ஆரம்பிக்க, எனது குரு, தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் மட்டுமே முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஏனென்றால் அரசியல் காரணங்களுக்காகக் கூட அவர் யாரையும் காயப்படுத்தியதில்லை.
எனவே, அவர் கட்சி ஆரம்பித்தால் கூட அவர் யாரையும் புண்படுத்த மாட்டார் என நான் நம்புகிறேன். தலைவர் அவரது ஆன்மிக அரசியலை ஆரம்பித்தவுடன், அவரது லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக, சமூகத்துக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி நான் சேவை செய்வேன்.
சேவையே கடவுள்.
நவம்பர்?” என்று தெரிவித்துள்ளார்.