தமிழ் இலக்கியப் பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்குச் சொந்தக்காரர், சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர், கி.ரா என்று அன்பாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் அவர்கள் நேற்று (17.05.2021) இரவு காலமானார். அவருக்கு வயது 98. ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்ல கிராமத்து மக்கள்’, ‘கரிசல்காட்டு கடுதாசி’, ‘வட்டார வழக்கு சொல்லகராதி’ போன்ற காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்த கி. ராஜநாராயணன், அண்மைக்காலமாக முதுமை நோய்க்கான சிகிச்சை எடுத்துவந்தார். கி.ராவின் மறைவையடுத்து, இலக்கிய வாசகர்கள், திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்தச் சூழலில், எழுத்தாளர் கி.ரா குறித்து கவிஞர் உமா மோகன் நக்கீரனிடம் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"ஒருமுறை, கி.ராவிடம் நீங்கள் என்ன லட்சியத்தோடு முதன்முதலில் எழுத ஆரம்பித்தீர்கள் என்று நான் கேட்டதற்கு, "குழந்தை எழுந்து உட்காருகிறது; என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டா அது எழும். முதலில் தவழும்; பிறகு நடக்கும். நானும் அதுபோலத்தான். எந்தத் திட்டத்தோடும் எழுத ஆரம்பிக்கவில்லை என்றார். கி.ராவின் இந்த எளிமையை மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கிறேன். அவரை உச்சியில் வைத்து நாம் கொண்டாடுகிறோம். ஆனால், அது எதையுமே மண்டைக்குள் கொண்டுபோகாத மனிதராகவே இறுதிவரை அவர் வாழ்ந்துள்ளார். எதையும் விரும்பாமல் தன்னுடைய இயல்பின்படி கரிசல் காட்டு சம்சாரியாகவே கடைசிவரை வாழ்ந்தார். கி.ராவின் எழுத்துகளும் மிக எளிமையானவை. அந்த எளிமையில் இருந்து கற்றுக்கொள்ள ஆடம்பரமான விஷயங்கள் ஆயிரம் உள்ளன".
"கதவு சிறுகதையில் கதவை ஜப்தி செய்து எடுத்துச் செல்வது, அந்த வீட்டின் வறுமை, அந்தக் குழந்தைகள் அதை எப்படி அணுகுகிறார்கள் என்பதை அழகாக எழுதியிருப்பார். கதவு கதை பற்றி கி.ரா என்னிடம் ஒருமுறை கூறுகையில், கதவு கதையை எழுதிவிட்டு பத்திரிகைக்கு அனுப்பியபோது இதெல்லாம் ஒரு கதையா எனக் கேட்டார்கள். இன்று இதுதான் கதை என்கிறார்கள்" என்றார். கரிசல் மக்களின் வறுமையை அவர்களின் பாடுகளை இதற்குமுன் யாரும் எழுத்தில் கொண்டுவரவில்லை என்பதால் ஆரம்பத்தில் இதை அங்கீகரிக்க அவர்களுக்கு சங்கடங்கள் இருந்திருக்கலாம். தொடர்ந்து கி.ரா அதை எழுதி அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைத்தார். இன்று கோவில்பட்டியை எழுத்தாளர் படை உள்ள இடமாக மாற்றியதில் கி.ராவின் பங்கு முக்கியமானது. அங்கிருந்து வந்த எழுத்தாளர்கள், 'எங்களை வளர்த்தெடுத்தவர்', 'உரையாடல்கள் வழி எங்களை உருவாக்கியவர்' என்று கி.ராவை குறிப்பிடுகின்றனர்" எனக் கூறினார்.