![Pisasu 2 movie release date announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/iXbeRo2lKOPfzC9hoyx9IxMWDTk9RIqAQeox6SG-2U8/1657719332/sites/default/files/inline-images/1254_1.jpg)
'பிசாசு', 'துப்பறிவாளன்', 'சைக்கோ' உள்ளிட்ட பல வித்தியாசமான வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை இயக்குநர் மிஷ்கின் பிடித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பிசாசு 2 திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநாளில்தான் கார்த்தியின் விருமன் படமும் வெளியாக உள்ளது. ஒரே நாளில் மிஷ்கின் மற்றும் கார்த்தியின் படங்கள் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.