திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து தமிழ்நாடு அரசு, மத்திய அரசினை ஒன்றிய அரசு என்றே அழைத்துவருகிறது. திமுக அமைச்சர்களும் தங்களது பேட்டிகளில் ஒன்றிய அரசு என்றே அழைத்துவருகின்றனர். இந்நிலையில், பத்திரிகையாளர் மாலன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ‘தமிழ்நாடல்ல, தமிழகம்! Govt of Tamilnadu என்பதை தமிழ்நாடு அரசு என்று நம் மாநில அரசு அலுவல் பூர்வமான ஆவணங்களிலும், பொது வழக்கிலும் குறித்துவருகிறது. அதற்கு மாற்றாக தமிழக அரசு என்றும் தமிழ்நாடு என்பதற்குப் பதில் தமிழகம் என்றும் குறிக்குமாறும் அழைக்குமாறும் நாம் கோருவோம்’ என்று ஒரு பதிவை போட்டிருந்தார்.
இந்தப் பதிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூகவலைதளங்களில் இருதரப்பினரும் அவர்களின் கருத்துக்களைப் பதிவிட்டுவருகின்றனர். இந்நிலையில், திரைப்பட இயக்குநர் பேரரசு, "எங்களை மத்திய அரசுன்னு அழைக்க வைங்க! இல்ல ஒன்றிய அரசுன்னு அழைக்க வைங்க! தமிழகம்னு அழைக்க வைங்க! இல்ல தமிழ்நாடுன்னு அழைக்க வைங்க! மொதல்ல மக்களை பிழைக்க வைங்க! நாடு சுடுகாடா ஆயிட்டிருக்கு. இப்ப போயி ஒன்றிய அரசு, ஒன்றாத அரசுன்னு... மக்கள காப்பாத்துங்கப்பா!" என்று இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.