ஆண்டுதோறும் ஹாலிவுட் சினிமாத்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வெகு விமர்சியாக நடைபெற்றுள்ளது. தொகுப்பாளர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் இந்த விழாவில் பிரபல திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஜோக்கர், பாரசைட் உள்ளிட்ட 9 படங்கள் பரிந்துரையில் இடம்பெற்றுள்ளன. அயல்நாட்டு திரைப்படமான பாரசைட் இந்தமுறை அதிக விருதுகளை பெறும் என்று முன்னமே பலரும் கணித்தனர் அதுபோல இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருது விழாவில் நான்கு விருதுகளை தட்டிச்சென்றுள்ளது. அயல்நாட்டு படம் இப்படி பல விருதுகளை குவித்திருப்பது வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான முதல் ஆஸ்கர் விருதினை பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தட்டிச் சென்றார். "ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் ஹாலிவுட்" எனும் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பிராட் பிட்டுக்கு 'சிறந்த துணை நடிகர்' எனும் பிரிவில் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- சிறந்த நடிகருக்கான விருது ஜோக்கர் படத்தின் கதாநாயகன் ஆக்கின் ஃபீனிக்ஸ் ஆஸ்காரை தட்டிச் சென்றார். இந்த படத்திற்காக பல சர்வதேச விருதுகளை ஆக்கின் பெற்றிருக்கிறார்.
- சிறந்த நடிகைக்கான விருதினை ரினே ஸெல்வேகர் என்பவருக்கு ஜூடி படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதினை பாரசைட் படத்திற்காக பாங் ஜூன் ஹோ பெற்றார்.
- சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதினை பாரசைட் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அயல்நாட்டு திரைப்படம் சிறந்த படமாக ஆஸ்காரில் தேர்வானது இதுவே முதல் முறை.
- சிறந்த துணை நடிகைக்கான விருதை 'மேரேஜ் ஸ்டோரி' எனும் படத்தில் நடித்த லாரா டெர்ன் பெற்றார்.
- சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருதை 'லிட்டில் வுமன்' திரைப்படத்தில் பணியாற்றியதற்காக ஜாக்குலின் டர்ரன் பெற்றார்.
- சிறந்த பாடலுக்கான விருதினை எல்டன் ஜான், பெர்னீ டாபின் ஆகியோர் ராக்கெட்மேன் என்னும் பாடலுக்காக பெற்றனர்.
- சிறந்த பின்னணி இசைக்கான விருதினை ஜோக்கர் படத்திற்காக ஐஸ்லாந்தை சேர்ந்த ஹில்டர் குட்னடாட்டிர் பெற்றார்.
- உலகம் முழுவதும் பிரபலமடைந்த பாரசைட் படத்திற்கு சிறந்த சர்வதேச திரைப்படம் என்னும் விருது வழங்கப்பட்டது.
- சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரத்திற்காக பாம்ஷெல் படத்திற்கு ஆஸ்கார் வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த விஎஃப்எக்ஸ்க்கான ஆஸ்கார் விருதினை 1917 படம் தட்டிச் சென்றது.
- சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கார் விருதினை ‘ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி’ படத்திற்காக மைக்கெல் மஸ்கர், ஆண்ட்ரூ பக்லேண்ட் ஆகியோர் பெற்றனர்.
- சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கார் விருதினை ‘1917’ படத்திற்காக ராஜர் டீகின்ஸ் பெற்றார். கடந்த வருடம் ‘பிளேட் ரன்னர் 2049’ படத்திற்காக ரோஜர் டீக்கின்ஸ் ஆஸ்கார் விருதினை தட்டிச் சென்றார்.
- சிறந்த ஒலிக் கலவைக்காக 1917 படத்திற்கு மார்க் டெய்லர், ஸ்டூவர்ட் வில்சன் ஆகியோர் ஆஸ்கார் விருதினை பெற்றனர்.
- சிறந்த ஒலித் தொகுப்புக்காக ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி படத்திற்கு டொனால்ட் சில்வெஸ்டர் ஆஸ்கார் விருதினை பெற்றார்.
- சிறந்த உறுதுணை நடிகைக்காக ஆஸ்கார் விருதினை ‘மேரேஜ் ஸ்டோரி’ படத்திற்காக லாரா டெர்ன் பெற்றார்.
- ‘லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் எ வார்ஸோன்’ என்னும் படத்திற்கு சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.
- அமெரிக்கன் ஃபேக்டரி படத்திற்கு சிறந்த ஆவணப் படம் என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த ஆடை வடிவமைப்புக்காக லிட்டில் வுமன் படத்திற்கு ஜாக்வலின் டுர்ரான் விருதினை பெற்றார்.
- சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்காக ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்திற்கு ஆஸ்கார் வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த குறும்படத்திற்காக தி நெய்பர்ஸ் விண்டோ குறும்படத்திற்கு ஆஸ்கார் வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது ஜோஜோ ராபிட் படத்தின் எழுத்தாளர் டைகா வைடிடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த அசல் திரைக்கதை, பாரசைட் படத்திற்காக பாங் ஜூன் ஹோ, ஹான் ஜின் வொன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த அனிமேஷன் குறும்படம், ஹேர் லவ் குறும்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
- சிறந்த அனிமேஷன் திரைப்படம், டாய் ஸ்டோரி 4 படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.