ஆண்டுதோறும் ஹாலிவுட் சினிமாத்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. தொகுப்பாளர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் இந்த விழாவில் பிரபல திரைப்பட நடிகர்கள், நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அயல்நாட்டு திரைப்படமான பாரசைட் இந்தமுறை அதிக விருதுகளை பெறும் என்று முன்னரே பலரும் கணித்தனர். அதுபோல இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருது விழாவில் ஆறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த படம் நான்கு விருதுகளை தட்டிச்சென்றுள்ளது. ஆஸ்கர் வரலாற்றிலேயே சிறந்த படத்திற்கான விருதினை அயல்நாட்டு திரைப்படத்திற்கு வழங்கியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
தென்கொரிய படமான ‘பாரசைட்’ படத்தை பாங் ஜூன் ஹோ இயக்கியிருந்தார். தென் கொரியாவின் நிலப்பரப்பிலிருக்கும் மக்கள், அவர்களின் பேச்சு, பழக்கவழக்கம் என்று அனைத்தையுமே யதார்த்ததுடன் சேர்த்து, உலகளாவிய பிரச்சனையான வர்க்கப் பிரச்சனையையும் இப்படத்தில் பேசியிருக்கிறார் இயக்குனர். பொதுவாக அரசியல், சமூக அக்கறைக்கொண்ட படங்களில் ஓவராக மக்களின் மீது அக்கறைக்கொண்டு பிரச்சார நெடி அடிக்கும், ஆனால் பாரசைட்டில் அப்படியில்லாமல் யதார்த்தமான வர்க்க பிரச்சனையையும், ஏழைக்கு பணக்காரர்கள் மீது இருக்கும் பார்வையையும், பணக்காரர்களுக்கு ஏழைகள் மீது இருக்கும் பார்வையையும் நேர்த்தியாக திரைக்கதையில் அமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு. இயக்குனர் இந்த ஏற்றத்தாழ்வை வைத்து ஒரு சாராரின் உணர்வுகளை தூண்டிவிடும் வகையான படத்தை எடுக்க நினைக்காமல், காமெடியாகவும் த்ரில்லராகவும் கையாண்ட விதம் பெரும்பாலானவர்களை கவர்ந்தது.
உலக அரங்கில் பல முக்கிய சர்வதேச விருது விழாக்களிலும் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது இப்படம். இதன்பின் அமெரிக்காவில் ரிலீஸ் செய்யப்பட்ட பாரசைட், கடந்த வருடம் தியேட்டர்களில் வசூலை வாரிக்குவித்தது. இப்படி பல விஷயங்களால்தான் ஆஸ்கர் நிகழ்ச்சியிலும் ஆங்கில படங்களுக்கு நிகராக நின்று போட்டி போட முடிந்திருக்கிறது இப்படத்தால். ஆசிய கண்டத்திலிருந்து சிறந்த கருத்தையும், கருவையும் கொண்டு யுனிவர்சல் படமாக ஆஸ்கரில் போட்டிப்போட்ட பாரசைட் படம் சிறந்த படம், சிறந்த சர்வதேச படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர் உள்ளிட்ட விருதுகளை தட்டிச் சென்றது.
சிறந்த இயக்குனருக்கான விருதினை பெற்ற பிறகு பேசிய பாரசைட் இயக்குனரும், “ஆஸ்கர் அனுமதித்தால் ரம்பத்தை எடுத்து ஐந்து துண்டாக விருதை பிரித்தெடுத்து என்னுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற இயக்குனர்களுக்கு தருவேன்” என்று வெகுளியாக பேசினார். மேலும், நான் பள்ளியில் படிக்கும்போது மார்டின் ஸ்கோர்சஸியை பார்த்துதான் சினிமா கற்றுக்கொண்டேன், இன்று அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ள சிறந்த இயக்குனருக்கான பட்டியலில் நானும் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. அதேபோல பாரசைட் படத்தை தன்னுடைய ஃபேவரைட் லிஸ்ட்டில் வைத்திருந்த குவிண்டின் டரண்டினோவுக்கும் நன்றி” என்று தெரிவித்தார்.
இப்படி பல சர்வதேச மேடைகளில் சாதனை படைத்துவிட்டு தற்போது ஆஸ்கரில் வரலாறு படைத்திருக்கும் இந்த படம், சிறந்த படம் என்ற ஆஸ்கர் விருதுக்கு தகுதியானதல்ல என்று சிலர் சமூக வலைதளங்களில் பதிவிடுவது, திரைப்படத்துறையில் புரையோடிப்போயுள்ள வர்க்கக் கண்ணோட்டத்தை வெளிகாட்டுவதாகவே பார்க்கப்படுகிறது. இந்த பதிவுகள் அனைத்தும், ஆசியாவை சேர்ந்த ஒருவர் இப்படி விருதுகளை பெற்றுவிட்டார் என்பதற்காகவா? அல்லது ஒரு சிறிய பிராந்தியத்தின் படைப்பு, உலகளாவிய சந்தை கொண்ட ஒரு படைப்புலகின் தயாரிப்பை மிஞ்சிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையின் வெளிப்பாடா? என பல கேள்விகளை நம்முள் ஏற்படுத்தி செல்கின்றன. திரைப்படத்திற்கு மொழியில்லை என்பதுதான் ஒவ்வொரு திரைப்பட கலைஞனும் சொல்வது, அப்படி இருக்கையில் ஏன் இந்த வெறுப்பு பேச்சு. ஒரு படத்தை விமர்சிப்பது என்பது அனைவரும் செய்வதே. ஆனால் அந்த விமர்சனத்தின் வரையறைகளை கடந்து பாரசைட் படம் சந்திக்கும் இந்த விமர்சனங்கள், ஹாலிவுட் படங்களை உலக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு, மற்ற உலக மொழி படங்களை ஹாலிவுட் ரசிகர்கள் எற்றுக்கொள்ள மறுக்கின்றனரோ என்ற கேள்வியையும் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.