![pa.ranjith speech in blue star audio launch](http://image.nakkheeran.in/cdn/farfuture/zNJLu2DrJ3iw-h2icf_P-Z3_bXU2bBdO--K5y8YWTAQ/1705922573/sites/default/files/inline-images/186_19.jpg)
'நீலம் புரொடக்ஷன்ஸ்' சார்பாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெய்குமார் இயக்கத்தில் ஷாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இவரது இசையில் ‘ரெயிலின் ஒலிகள்...’, ‘அரக்கோணம்’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ட்ரைலரும் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பா. ரஞ்சித், அசோக் செல்வன், ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் எனப் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பா.ரஞ்சித், “இன்று ரொம்ப முக்கியமான நாள். வீட்டில் கற்பூரம் கொளுத்தாவிட்டால் தீவிரவாதிகள் ஆகி விடுவோம். அந்த அளவிற்கு பயங்கரமா போயிகிட்டு இருக்கு. ரொம்ப தீவிரமான காலகட்டத்தை நோக்கி இந்தியா நகர்கிறது. இன்னும் 5, 10 ஆண்டுகளில், எப்படி ஒரு மோசமான இந்தியாவில் இருக்க போகிறோம் என்ற பயம் இருக்கிறது. அந்த காலகட்டத்திற்கு நுழைவதற்குள், நம்மளை நாம் சரி செய்வதற்கு, நம் மனதை பண்மைப்படுத்துவதற்கு, நம் மூளையில் ஏற்றி வைத்திருக்ககூடிய பிற்போக்குத்தனத்திற்கு, தினம் தினம் சொல்லிகொடுக்கிற மதவாதத்தை அழிப்பதற்கு கலையை நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.
மக்களிடம் எளிதாக சென்றடையக் கூடிய கருவி கலை. இந்த கலை, ரொம்ப வலுக்கட்டாயமாகத் திணித்துக் கொண்டிருக்கிற பிற்போக்குத்தனத்தை அழிக்கும் என நம்புகிறோம். அந்த நம்பிக்கையோடு தான் கலையை நாம் கையாண்டு வருகிறோம். இந்தியாவை மோசமான காலகட்டத்திற்கு தள்ளிப் போக விடாமல், தடுத்து நிறுத்த நம்மளால் முடிந்ததை செய்ய வேண்டும். இந்தியா முழுக்க இதை செய்ய வேண்டும். இன்றைய நாள் ரொம்ப முக்கியமானதாக நாம் பார்த்து வருகிறோம். இன்றையிலிருந்து ஒரு புதிய வரலாறே ஆரம்பிக்கிறது. அந்த வரலாற்றில் நாம் எங்கே இருக்க போகிறோம் என்ற யோசனை நமக்கு வேண்டும். ப்ளூ ஸ்டார், நீல நட்சத்திரம், நீல வானம்...அந்த நீலம் சரியான இடத்தை நோக்கி நம்மை வழி நடத்தும் என நம்புகிறேன்” என்றார்.