Skip to main content

"தீண்டாமையின் தாக்கம்தான் என் படங்களில் வெளிப்படுகிறது" - உண்மை சம்பவத்தைப் பகிர்ந்த பா. ரஞ்சித்

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

pa. ranjith speech in kosalai book launch

 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் பா. ரஞ்சித் தற்போது விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனிடையே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று சென்னையில் நடைபெற்ற 'கோசலை' நாவல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது சிறு வயதில் தனக்கு நேர்ந்த தீண்டாமை கொடுமை பற்றி கூறியுள்ளார். 

 

இது குறித்து பா. ரஞ்சித் பேசுகையில், "நான் பள்ளிக்கூடம் படிக்கும்போது சிறந்து விளங்கக்கூடிய மாணவராக இருந்தேன். அப்போது ஒருநாள், தெருவில் உள்ள ஒரு கடைக்கு கிரிக்கெட் பந்து வாங்குவதற்காகப் போனேன். கடைக்காரரிடம் கேட்டேன். அவர் என்னிடம் தரவில்லை. எங்கிருந்து வர என்று கேட்டார். காலனியில் இருந்து என்றேன். அப்பா பேர் கேட்டார்... பேர் சொன்னேன். உடனே தூரமாக நில்லு என சொல்லிவிட்டார். பந்து கொடுக்கும்போது கூட அந்த பந்தை என்னைத் தொட விடவில்லை. காசு கொடுத்தவுடன் என் கையில் இருந்து வாங்கவில்லை. அருகில் இருந்த ஒரு தட்டில் வைக்கச் சொல்லிவிட்டு அந்த காசை ஒரு குச்சியால் தொட்டு, காசுதானா என்று உறுதி செய்துவிட்டு பின்பு எடுத்தார். 

 

பின்பு நான் வாங்கிய பந்தை தொட்டுப் பார்த்தேன். காத்து கம்மியா இருந்தது. அதனை நான் கேட்டபோது, நீ... தொட்டுவிட்டாய் அதனால் அந்த பந்து உன்னுடையதுன்னு சொல்லிவிட்டார். அப்போது என்னால் திருப்பி கேட்க முடியவில்லை. இதனை ஒரு காட்சியாக என் படத்தில் வைக்க ஒருநாளும் நான் விரும்பியது கிடையாது. அந்த சம்பவத்தினால் ஏற்பட்ட தாக்கம்தான் என்னுடைய திரைப்படங்களில் நான் வெளிப்படுத்துகிறேன்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்