இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் எனத் தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழக அரசிற்கு பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது.
இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவுக்கு நிதியுதவி அளித்துவருகின்றனர். அந்த வகையில், நடிகை நிதி அகர்வால் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். இதுவரை திரைத்துறையில் ஆண் திரை பிரபலங்கள் மட்டுமே நன்கொடை அளித்துள்ள நிலையில், தற்போது முதல் நடிகையாக நிதி அகர்வால் நன்கொடை அளித்துள்ளார்.