![mysskin about vijay leo movie](http://image.nakkheeran.in/cdn/farfuture/WyUE2ipHgPYmYupEKv7s6RQ6DH0AzWmvQMhkysV-axE/1677481752/sites/default/files/inline-images/266_7.jpg)
'வாரிசு' படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படம் 'லியோ'. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். மேலும், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த 3ஆம் தேதி வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் தற்போது காஷ்மீரில் முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அந்த படப்பிடிப்பில் இயக்குநர் மிஷ்கினும் கலந்து கொண்டுள்ளார். அந்த அனுபவங்களை ஒரு அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், "இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன். மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். உதவி இயக்குநர்களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது.
படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக் கொண்டிருந்தார். என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப் போல் களத்தில் இயங்கிக் கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன். என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்து கொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.