விக்ரமின் மகனான துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நிலையில், விக்ரமுடன் இணைந்து 'மகான்' படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா. ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமானார். 2021 ஆம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியான நிலையில், மாரி செல்வராஜ் மாமன்னன், வாழை என அடுத்தடுத்த படங்களில் பணியாற்றியதால் படப்பிடிப்பு தாமதமானது. மாமன்னன் வெளியானதை தொடர்ந்து வாழை பட பணிகளும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் கதை, அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலமாக துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 15 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 80 நாட்கள் ஒரே மூச்சில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் படத்தில், மலையாள கதாநாயகிகள் அனுபமா பரமேஷ்வரன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகிய இருவரும் கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இப்படத்தின் அனுபமா பரமேஷ்வரன் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இன்னும் பெயரிடாத இப்படத்தின் பணிகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியதாகவும் கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் குறித்து மாரி செல்வராஜ் பேசுகையில், “பரியேறும் பெருமாள், பா. ரஞ்சித் அண்ணாவுடன் நான் இணைந்த முதல் திரைப்படம். இப்படம் இவ்வளவு உயரம் எட்டியதற்கு பா. ரஞ்சித்தும் ஒரு முக்கிய காரணம். அவருடன் மீண்டும் ஒரு முறை இணைந்து பணியாற்றுவது உற்சாகத்தை அளிக்கிறது. இப்போது என்னுடைய ஐந்தாவது படத்திற்காக அவருடனும், மற்றொரு வலிமையான கூட்டாளியான அப்ளாஸ் என்டர்டெய்ன்மெண்ட்டுடனும் இணைந்திருக்கிறேன். இந்த திரைப்படம் கபடி என்னும் விளையாட்டின் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருக்கும். மேலும் துருவுடன் இணைந்து பணியாற்றுவது என்பதும் மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்தில் வலிமையாகவும். திறமையான இளைஞனாகவும் துருவ் விக்ரம் வித்தியாசமான கோணத்தில் திரையில் தோன்றுவார். இந்த திரைப்படம் நம் அனைவருக்கும் ஒரு முக்கியமான மைல் கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்றார்.