பரியேறும் பெருமாள், கர்ணன் என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசி படமாக வெளியாகும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதனிடையே 'வாழை' என்ற தலைப்பில் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக துருவ் விக்ரமுடன் ஒரு படம் மற்றும் தனுஷுடன் மீண்டும் ஒரு படம் இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த மாரி செல்வராஜ் தனுஷுடன் இணையும் படம் குறித்து ஒரு அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "இது முன்னாடியே திட்டமிட்டது தான். சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தொடர்ந்து ஆரம்பிக்க முடியவில்லை. இப்படத்தை தனுஷ் தயாரிப்பது சந்தோஷமான விஷயம். அவர் தயாரிப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை. இப்போது துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை ஆரம்பிக்கவுள்ளேன். இதனை முடித்துவிட்டு தனுஷ் படத்தை ஆரம்பிப்பேன். இப்படம் ஒரு பாய்ச்சலாக இருக்கும். இது ஒரு வரலாற்று படம்" என்றார்.
மேலும் பேசிய அவர், "மாமன்னன் படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும். தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக மாமன்னன் இருக்கும். என்னுடைய கரியரில் நான் நினைத்த கலைஞர்களை தேர்வு செய்து, இன்றைய சூழலில் இருக்கும் அரசியலை பேசக்கூடிய படமாக இருக்கும். மேலும் நான் விருப்பப்பட்டு இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என ஆசைப்பட்ட படமாக மாமன்னன் இருக்கும்.
இப்படத்தில் வழக்கமாக இருக்கும் வடிவேலுவை பார்க்கமாட்டீர்கள். அவரை வேறொரு வடிவமாக காட்ட முயற்சித்திருக்கிறோம். அது தமிழ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருக்கும். அவர் எவ்ளோ பெரிய லெஜெண்ட் என்பது படம் பார்க்கும்போது தெரியும். எல்லா இயக்குநர்களுக்கும் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் பணியாற்ற வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். அது எனக்கு இந்தப் படத்தில் கிடைத்தது. ரஹ்மான் சார் மாதிரி ஒரு கலைஞன் நம்முடைய படத்தை; அதில் இருக்கும் அரசியலைப் புரிந்து கொண்டு அதற்கு ஆதரவாகப் பேசுவது சந்தோஷமாக இருக்கிறது. நான் பயந்துகொண்டே இருந்தேன். ஆனால், அவர் ஒரு நண்பராக அணுகினார். நிச்சயமாக அவருடன் தொடர்ந்து பயணிப்பேன்" என்றார் .