எம்.பி.ராஜன் மலைச்சாமி இயக்கி, நடித்துள்ள படம் 'பூதமங்கலம் போஸ்ட்'. முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் யோகிபாபுவுக்கு நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசியவர் தர்பார் படத்தின் விநியோகஸ்தர்கள் பிரச்சனையை எடுத்துக்கொண்டு இயக்குனர் முருகதாஸையும் ரஜினிகாந்தையும் கடுமையாக விமர்சித்தார்.
அதில், “பெரிய நடிகர்கள், இயக்குனர்களைக் கேட்கிறேன். 100 கோடி, 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறீர்களே, அதை எந்தப் படத்தில் முதலீடு செய்கிறீர்கள்? 35 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் ஏ.ஆர்.முருகதாஸிடம் கேட்குகிறேன். நீங்கள் எந்தப் படத்தில் முதலீடு செய்கிறீர்கள்? எங்களுடைய தமிழ்நாட்டு பணம் எங்கே செல்கிறது. ஆனால், தயாரிப்பாளர்கள் கைக்கு வரும் பணம் மீண்டும் இந்த தமிழ் திரையுலகிற்குதான் வருகிறது.
தர்பாரை லைகா நிறுவனம் தயாரித்தது.ஆனால், இந்தப் படத்தின் ஷுட்டிங் முழுவதும் மும்பையில் நடைபெற்றது. அங்கு ஷூட்டிங் நடந்தால், தமிழ் சினிமாவை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு யார் வேலை கொடுப்பது?. அந்தப் படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், யோகி பாபு தவிர்த்து மீதம் நடித்த அனைவருமே வடஇந்தியர்கள் தான். அப்படி படம் எடுத்தால் எப்படி ஓடும்.
ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ் ஆகியோர் பக்கத்து மாநிலங்களாக இருந்தாலும் தமிழர்களாக ஏற்றுக் கொண்டுவிட்டோம். தமிழ் படங்களில் 75% படப்பிடிப்பை இங்கு நடத்தினால் என்ன? 25% வேறு எங்கு வேண்டுமானாலும் எடுங்கள். ஆந்திராவில் திரைத்துறை செழிப்பாக இருக்கிறது. ஒரு படம் நஷ்டமானால் விநியோகஸ்தர்களை அழைத்து பணத்தை பிரித்துக் கொடுக்கிறார்கள். இங்கு நஷ்டமாகிவிட்டு என்று இயக்குனர் வீட்டுக்குப் போனால் காவல்துறையில் புகார் அளிக்கிறார்கள். முழுக்க மும்பையில் எடுக்கப்பட்ட படத்தை தமிழ் ரசிகன் 300 ரூபாய் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிப் பார்க்கிறான்” என்றார்.