விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த கவின், ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கவின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘லிஃப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். வினீத் வரப்பிரசாத் இயக்க, ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் அனைத்துப் பணிகளையும் முடித்து ரிலீஸிற்குப் படக்குழு தயாரான நிலையில், கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் ரிலீஸில் சிக்கல் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, ‘லிஃப்ட்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது என சமூக வலைதளங்களில் தகவல் பரவ ஆரம்பிக்க, ‘லிஃப்ட்’ படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ள லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இத்தகவலை மறுத்தது.
இந்த நிலையில், ‘லிஃப்ட்’ படத்தின் தமிழ்நாடு உரிமையைக் கைவசம் வைத்துள்ள லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கும் தயாரிப்பு நிறுவனமான ஈகா என்டர்டெய்ன்ட்மென்ட் நிறுவனத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஈகா என்டர்டெய்ன்ட்மென்ட் நிறுவனம் தரப்பிலிருந்து நேற்று (13.09.2021) மாலை திடீரென அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி லிப்ரா புரொடக்ஷன்ஸ் நடந்துகொள்ளாததால் ‘லிஃப்ட்’ படம் தொடர்பாக அந்நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் முறித்துக்கொள்ளப்பட்டதாகவும், ‘லிஃப்ட்’ பட திரையரங்க வெளியீடு தொடர்பாக லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே லிப்ரா நிறுவனத்தின் தரப்பிலிருந்து பதில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில், "ஈகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'லிஃப்ட்' படத்தின் தமிழ்நாடு உரிமையை எனது லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல 50% முன்பணம் செலுத்தியுள்ளோம். மீதி 50% தொகை படத்தின் வெளியீட்டிற்கு முன் செலுத்த வேண்டும் என ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலைக்குப் பின் திரையரங்குகள் திறந்தவுடன் அக்டோபரில் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடலாம் என முடிவுசெய்து, கடந்த ஒருமாதமாக தயாரிப்பாளரைத் தொடர்புகொள்ள முயன்றுவருகிறோம். ஆனால், அவர் எங்கள் அழைப்புகளை எடுப்பதில்லை. இது சம்பந்தமாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம். சங்கத்திலிருந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதும் 'லிஃப்ட்' படத் தயாரிப்பாளர் எந்த பதிலும் அளிக்கவில்லை. தற்போது 'லிஃப்ட்' படத் தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் உடன் செய்த ஒப்பந்தம் முறித்துக்கொள்ளப்பட்டது என தானாகவே ஒரு வேடிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளார். 'லிஃப்ட்' படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமை லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம்தான் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை தெரியப்படுத்திக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரவிருக்கும் நாட்களில் இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்புகளும் அமர்ந்துபேசி சுமுக தீர்வை எட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.