வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் நான்காவது படமாக உருவாகி அக்டோபர் நான்காம் தேதி வெளியான படம் அசுரன். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
படம் ரிலீஸாகி விமர்சன ரீதியாகவும், பார்வையாளர்களையும் கவர்ந்தது. தனுஷின் படம் வணிக ரீதியாக முதன் முதலில் ரூ. 100 கோடி வசூல் ஈட்டிய படம் அசுரன் என்று புதிய சாதனையை படைத்துள்ளது.
வெக்கை என்னும் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகிய படம் இது. வெக்கை நாவலை எழுதியவர் பூமணி. இந்த படத்தில் தனுஷ் இளைஞராகவும், ஐம்பது வயது தோற்றத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அவருடைய நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அதேபோல படத்தில் நடித்த மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டீ ஜே, அபிராமி உள்ளிட்டோரின் நடிப்பும் பலரால் பாராட்டப்படுகிறது.
இந்நிலையில் பிற திரைதுறை பிரபலங்களும் இந்த படம் குறித்து பாராட்டி ட்வீட் செய்து வருகின்றனர். பாலிவுட் பிரபல இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் கரண் ஜோகர் இந்த படம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில், “ என்ன ஒரு அருமையான படம் அசுரன். இந்த படம் முழுவதுமே நமக்கு ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வெற்றிமாறனின் படைப்பை பார்த்தும், கதை சொல்லும் யுக்தியை கண்டும் வியக்கின்றேன். தனுஷின் உறுதியான நடிப்பு, வேறு யாரையும் அந்த நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. தயவு செய்து படத்தை அனைவரும் பாருங்கள். இது சினிமாவின் வெற்றி” என்று பதிவிட்டுள்ளார்.