Skip to main content

'பணமா பாசமா' திரைப்படத்தில் இடம்பெற்ற உணர்வுப்பூர்வமான காட்சி குறித்துப் பகிரும் கலைஞானம்!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

Kalaignanam

 

தமிழ்த் திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவந்தவர் கலைஞானம். சினிமாத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் குறித்தும் அவரது 'பணமா பாசமா' படம் குறித்தும் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் பற்றி இன்றைய தலைமுறையினருக்குப் பெரிய அளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ‘பேசும் தெய்வம்’, ‘பணமா பாசமா’, ‘ஆதிபராசக்தி’, ‘நத்தையில் முத்து’, ‘கை கொடுத்த தெய்வம்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை எடுத்தவர். அந்தக் காலத்தில் குடும்பக்கதைகள் என்றால் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்தான். இன்றைக்கு வரைக்கும்கூட அவருக்கு இணையாக குடும்பக்கதைகள் எடுக்க ஆளில்லை. அவர் எடுத்த படங்கள் எல்லாம் தொடர்ந்து வெற்றிபெற்றன. அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு எனக்கு நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்தன. 

 

‘பணமா பாசமா’ படத்திற்குப் பிறகுதான் அவருடன் இணைந்தேன். அதன் பிறகு, எட்டுப் படங்கள் ஒன்றாகப் பணியாற்றினோம். ‘முதல் மரியாதை’, ‘கிழக்குச் சீமையிலே’ படங்கள் பெற்ற வெற்றிக்கு இணையான வெற்றியைப் ‘பணமா பாசமா’ படம் பெற்றது. மதுரை தங்கம் தியேட்டரில்தான் படம் ரிலீஸானது. அந்தக் காலத்தில் மிகப்பெரிய தியேட்டர் என்றால் தங்கம் தியேட்டர்தான். ‘பராசக்தி’ திரைப்படம்தான் முதன்முதலில் அங்கு வெளியாகியது. மூன்று தியேட்டர்களை ஒரே தியேட்டர் ஆக்கியிருந்தார்கள். முதலில் திரையிடப்பட்ட ‘பராசக்தி’ திரைப்படம் அந்தத் திரையரங்கில் மட்டுமே நூறு நாட்களுக்கும் மேல் ஓடியது. ‘பணமா பாசமா’ திரைப்படம் வெளியானபோதும் நூறு நாட்களுக்கும்மேல் ஓடி சாதனை படைத்தது. கே.எஸ். கோபாலகிருஷ்ணனுக்கு இயக்குநர் திலகம் என்று ஒரு பட்டமும் இருந்தது. அந்தப் பட்டத்திற்கு முழுக்கத் தகுதியான அவர், உணர்வுப்பூர்வமான காட்சிகள் வடிவமைப்பதில் மிகவும் திறமையானவர். ‘பணமா பாசமா’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியை உதாரணமாகக் கூறுகிறேன்.    

 

கோடீஸ்வரியின் மகள், அவர்கள் வீட்டு வாட்ச்மேனின் மகனைக் காதலித்துவிடுவாள். வாட்ச்மேனின் மகனாக ஜெமினி கணேசன் நடித்திருப்பார். காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் ஜெமினி கணேசனை அழைத்துக்கொண்டு அந்தப் பெண் தனிக்குடித்தனம் சென்றுவிடுகிறாள். அதைப் பெரிய அவமானமாக நினைத்த அவரது அம்மா, ‘என் மகள் இறந்துவிட்டாள்... நான் அவளைத் தலைமுழுகிவிட்டேன்’ எனக் கூறிவிட்டார். அப்படியே நாட்கள் ஓடுகின்றன. தீபாவளி வருகிறது. தன் கணவனை அழைத்த அந்த அம்மா, ‘என்னதான் இருந்தாலும் நான்தான் அவளைப் பெற்றேன்... எனக்கு சில கடமைகள் இருக்கு... அதனால் இந்தப் புத்தாடைகளை அவள் வீட்டில் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வாருங்கள்’ என்கிறார். மகள் மீது இருந்த கோபம் காரணமாக அவர் அந்த வீட்டிற்கு வர மறுத்துவிடுகிறார். பின்பு, அவர் கணவர் மட்டும் செல்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்பாவைப் பார்த்த மகிழ்ச்சியில் அவரை மகள் வரவேற்கிறாள். அப்பா அந்தப் புத்தாடைகளைக் கொடுத்ததும் அதை வாங்கிக்கொள்கிறார். பின்பு, அவளும் சில புத்தாடைகளை எடுத்துவந்து அம்மாவிடம் கொடுக்கும்படி கூறுகிறார். அதை வாங்கிக்கொண்டு அப்பா கிளம்பிச் செல்கிறார். பின், மனைவியிடம் மகள் கொடுத்ததைக் கொடுக்கிறார். மகள் கொடுத்த சேலையைக் கட்டுவதற்கு அவருக்கு மனசில்லை. அதே நேரத்தில் மகள் எடுத்துக்கொடுத்ததை அவரால் தவிர்க்கவும் முடியாது. ‘அந்தப் பிச்சைக்காரி கொடுத்த சேலையை நான் கட்டணுமா’ எனக் கடுமையாக கோபப்பட்டுக்கொண்டே அந்தச் சேலையைக் கட்டுவார். அதைக் கட்டி முடித்துவிட்டுக் கதறி அழுவார். படம் பார்க்கும்போதே அந்தக் காட்சி மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும். இது மாதிரி பல உணர்வுபூர்வமான காட்சிகள் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் படங்களில் இடம்பெற்றிருக்கும்.

 

 

சார்ந்த செய்திகள்