
தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தன் படம் ஓடாது எனக் கூறிய தயாரிப்பாளருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த தண்டனை பற்றி அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
எஸ்.ஏ. நடராஜனிடம் கார் டிரைவராக நான் வேலைக்கு சேர்ந்தது குறித்து கடந்த பகுதியில் கூறியிருந்தேன். சம்பளம் வாங்காமல் அவர் வீட்டில் மூன்று வேளை சாப்பிட்டுக்கொண்டு அவரிடம் வேலை பார்த்தேன். அங்கு வேலை பார்த்துக்கொண்டே படத்தில் நடிக்க வாய்ப்பும் தேடினேன். ஒரு கட்டத்திற்கு மேல் அவரிடம் வேலை பார்க்க எனக்கு விருப்பமில்லை. எஸ்.ஏ. நடராஜன் மிகுந்த வறுமையில் இருந்தார். அந்த கஷ்டத்திற்கு மத்தியிலும் அவரது மனைவி என்னை உடன்பிறந்த ஒரு சகோதரர் போல பார்த்துக்கொண்டார். சாப்பாட்டிற்கு எந்தக் குறையும் வைக்கமாட்டார். அவர்களுடைய வீட்டில் ஒரு மாதம் வேலை பார்த்தேன். ஒரு கட்டத்தில் எனக்கும் எஸ்.ஏ. நடராஜனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது. 'என்னடா நினைச்சுட்டே... நான் யாருன்னு தெரியுமுல...' என்று ஒரு முறை குரலை உயர்த்திப்பேசி கை ஓங்கிவிட்டார். என்னதான் இருந்தாலும் அவர்கள் வீடு எனக்கு சோறு போட்ட இடம். அவர்கள் மனசு கஷ்டப்படும்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என்று நினைத்து நான் வேலையைவிட்டு நின்றுவிட்டேன்.
அங்கிருந்து வந்து அம்பாள் டாக்கீஸ் என்ற கம்பெனியில் டிரைவர் வேலைக்கு சேர்ந்தேன். தியாகராஜ பாகவதர் நடித்த அசோக் குமார் படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான சுந்தர் ராமையா, இப்போது தனியாக படம் எடுக்க வந்தார். பாதி படம் நடித்திருக்கையிலேயே எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் ஆரம்பித்துவிட்டார். அதனால் கலையரசி, இன்பக்கனவு, மதிவாணன் என மூன்று தயாரிப்பாளர்களையும் சில காலம் காத்திருக்கச் சொல்லிவிட்டார். நான் அந்தப் படத்தை முடித்துவிட்டு உங்கள் படத்திற்கு வருகிறேன். அந்தப் படம் நல்லபடியாக ஓடினால் உங்கள் படத்தை நீங்கள் நல்ல விலைக்கு விற்கலாமே என்று எம்.ஜி.ஆர் கூறியதால் அவர்களும் சரி என்றனர். கிட்டத்தட்ட இதில் ஓராண்டுகள் கடந்து விட்டன. நான் சுந்தர் ராமையாவிற்கு தேவைப்படும் நேரங்களில் கார் ஓட்டிக்கொண்டு, மற்ற நேரங்களில் புத்தகம் படித்துக்கொண்டு இருப்பேன்.
ஒருநாள், அந்த மூன்று தயாரிப்பாளர்களும் சந்தித்து பேசிக்கொண்டிருக்கையில், 'எம்.ஜி.ஆர் எடுக்கும் படம் ஓடினால் நம் படத்தை நல்ல விலைக்கு விற்கலாம். ஒருவேளை படம் ஓடவில்லை என்றால்....?' என்று ஒருவர் கேட்க, சிவாஜி கணேசனிடம் போகவேண்டியதுதான் என்று எங்கள் தயாரிப்பாளர் கூறிவிட்டார். இந்த விஷயம் எம்.ஜி.ஆர் அண்ணன் சக்கரபாணி காதுக்கு சென்றுவிட்டது. சக்கரபாணி எம்.ஜி.ஆரிடம் அதை அப்படியே கூறிவிட்டார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜி கணேசனுக்கும் இடையே பெரிய போட்டி இருந்தது. சக்கரபாணி கூறியதை அமைதியாக கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர்.
நாடோடி மன்னன் படம் வெளியானபோது மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதன் பிறகு, கால்ஷீட்டிற்காக மூன்று தயாரிப்பாளர்களும் எம்.ஜி.ஆரை சந்திக்க சென்றனர். எங்கள் தயாரிப்பாளரை மட்டும் தனியாக உட்காரச் சொல்லிவிட்டார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் சம்பளம் 75,000 ரூபாய். ஒன்றரை லட்சம் கொடுத்தால்தான் அவர் படத்தில் நான் நடிப்பேன் என்று கூறிவிடுங்கள் என சக்கரபாணியிடம் கூறிவிட்டார் எம்.ஜி.ஆர். 'ஒரு காலத்தில் அவர் தயாரித்த அசோக் குமார் படத்தில் ஒரு சீனில் நடித்தோமே என்ற நன்றியோடு அவருக்கு படம் நடித்துக்கொடுக்க முன்வந்தால், நான் எடுக்கும் படம் ஓடவில்லை என்றால் என்ன செய்வது என்று ரோட்டில் நின்று பேசிக்கொண்டு இருக்கிறார். இது நல்லா இல்லை' என்றார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். ஒரு லட்சம் கேட்பதாக சுந்தர் ராமையாவிடம் வந்து சக்கரபாணி கூறினார். சக்கரபாணி ஒன்றரை லட்சம் சம்பளம் வேண்டும் என்று கூறியதைக் கேட்டு சுந்தர் ராமையா அதிர்ச்சியடைந்துவிட்டார். அந்தக் காலத்தில் 75 ஆயிரம் என்பதே அதிகமான சம்பளம். அவ்வளவு சம்பளம் தர தன்னால் இயலாது எனக் கூறிய சுந்தர் ராமையா, 85 ஆயிரம் சம்பளம் தருவதாகக் கூறினார். கடைசியில் அந்தப் படத்தில் நடிக்க முடியாது என எம்.ஜி.ஆர் கூறிவிட்டார்.
வேறுவழியில்லாமல் அந்தக் கதையில் டி.ஆர்.மகாலிங்கத்தை நடிக்க வைத்தோம். அப்படி உருவான படம்தான் மாலையிட்ட மங்கை. அந்தப் படத்தின்போதுதான் எஸ்.ஜானகி பாடுவதற்கு வாய்ப்பு கேட்டுவந்தார். ஜானகி பாடுவதைக் கேட்டு டி.ஆர்.மகாலிங்கம் பிரமித்துவிட்டார். அந்தப் படத்தில் பாட அவருக்கு ஒரு வாய்ப்பும் கொடுத்தார்.