
தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்துப் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் மறைந்த நடிகர் ஸ்ரீகாந்த் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதன் இரண்டாம் பாகம் பின்வருமாறு...
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, நடிகர் ஸ்ரீகாந்தை என்னுடைய படத்தில் வில்லனாக நடிக்க வைக்க அணுகியது குறித்து கடந்த பகுதியில் கூறியிருந்தேன். அவரும் சம்மதித்து விட்டதால் படத்தின் வேலைகளை தடபுடலாகத் தொடங்கினோம். பலரின் எதிர்ப்புகளுக்கு இடையே அப்படத்தில் ரஜினிகாந்தை கதாநாயகனாக அறிமுகம் செய்தேன். பைரவி படத்தின் பூஜையே பிரம்மாண்டமாக நடந்தது. சிவாஜி கணேசன், கே.பாலசந்தர், சின்னப்பத்தேவர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் உட்பட பல பிரபலங்கள் வருகை தந்ததால் அந்த இடமே ஸ்டார்மயமாக இருந்தது.
தன்னுடைய தங்கையை கெடுத்த வில்லனை வீடு புகுந்து ரஜினிகாந்த் சாட்டையால் அடிப்பதுதான் படத்தின் முதல் காட்சி. அந்தக் காட்சியில் இருந்துதான் படப்பிடிப்பைத் தொடங்கினோம். அதை எடுக்கும்போது ஸ்ரீகாந்திற்கு உண்மையிலேயே சாட்டை அடி விழுந்துவிட்டது. இந்தப் படத்தில் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டோம் என அவர் நினைக்கும் அளவிற்கு அடி விழுந்துவிட்டது. அந்தக் காட்சி எடுத்து முடித்தவுடன் அடி விழுந்துவிட்டதா ஸ்ரீகாந்த்... சட்டையை கழட்டுங்கள் என்றேன். அதெல்லாம் ஒன்னுமில்லை... நடிப்புன்னு வந்துட்டா இதெல்லாம் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டார். அந்த அளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார் ஸ்ரீகாந்த். பைரவி வெளியான போது மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஸ்ரீகாந்திற்கு பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அவர் கதாநாயகனாக நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது.
நான் பைரவி படம் முடிந்ததும் செல்லக்கிளி படம் எடுத்தேன். அப்போது எனக்கு ஃபோன் செய்த ஸ்ரீகாந்த், கலைஞானம் உன் படத்துல எனக்கு ஏதும் வேஷம் இல்லையா என்றார். என்னயா இப்படி கேட்டுடீங்க என நான் கேட்க, நீ சொன்னன்னு நான் நடிச்சேன்... உன் படம் நல்லா ஓடிருச்சு... இப்ப அடுத்த படமும் தொடங்கிட்ட... எனக்கு வேஷம் இல்லயா என்றார். எனக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. உடனே அந்தக் கதையில் ஒரு கதாபாத்திரத்தைச் சேர்த்து, அதில் அவரை நடிக்க வைத்து சம்பளம் கொடுத்தேன். எல்லோரிடமும் அன்பாகப் பழகக்கூடிய மனிதர் ஸ்ரீகாந்த். கே. பாலசந்தர் உட்பட பலருக்கும் ஆரம்பக்காலத்தில் சோறு போட்டவர் ஸ்ரீகாந்த் தான். அந்த நன்றிக்காக பின்னாளில் தன்னுடைய எல்லா படங்களிலும் ஸ்ரீகாந்திற்கு வாய்ப்பு கொடுத்தார் பாலசந்தர்.
தங்கப்பதக்கம் படத்தில் அப்பனை எதிர்க்கிற வில்லனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். எந்த வேஷம் கொடுத்தாலும் கச்சிதமாக நடிக்கக்கூடியவர். படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் இயல்பில் மிக சாதுவான மனிதர். நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க விரும்புவதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதை என்னிடம் கூறியிருந்தால் நானே ரஜினிகாந்திடம் அவரை அழைத்துச் சென்றிருப்பேன். கடைசியில் அந்த ஆசை நிறைவேறாமலேயே அவர் இறந்துவிட்டார். அவருடைய மரணம் எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.