நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாகத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.
இதற்கிடையே கரோனா இரண்டாம் அலையால் சில மாதங்களாகவே சில மாதங்களாகவே திரை பிரபலங்களான விவேக், கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன், பவுன்ராஜ், அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக உயிரிழந்துவருவது மக்களிடையே கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் கரோனா தொற்றுக்குச் சிகிச்சை எடுத்துவந்த நடிகர் நிதிஷ் வீரா மரணமடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதிஷ் வீராவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ‘புதுப்பேட்டை’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘அசுரன்’ உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர், தமிழ்த் திரையுலகில் சிறந்த துணை நடிகராக அறியப்பட்டார். இதனையடுத்து, நிதிஷ் வீரா மறைவுக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்ற நிலையில் நடிகர் காளி வெங்கட் சமூகவலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்...
"சினிமா மீதான ஆவலும், அங்கலாய்ப்பும் உன்னைப்போல் ஒருவரிடமும் கண்டதில்லை. வருவாய் மீண்டும் உனை கேலி செய்ய வேண்டும் என கார்த்தியும், நானும் காத்திருந்தோம். நம்ப முடியவில்லை நண்பா மனம் கனக்கிறது. ஆழ்ந்த இரங்கல் நிதிஷ் வீரா" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.