காசிமேடு கேட் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவோடு நடிகர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் கே. ராஜன் கலந்து கொண்டார்.
நிகழ்வில் கே. ராஜன் பேசியதாவது, “நான் பிறந்து வளர்ந்த இடம் காசிமேடு. காசிமேடு மக்கள் மிக அருமையான மக்கள். யாருக்கும் கெடுதல் செய்யமாட்டார்கள். வாத்தியாராக வேலை செய்து வந்த நான், எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட்டு 700 வாக்குகளில் தோல்வியடைந்தேன். என்னை மட்டுமல்லாமல், பல லட்சம் குழந்தைகளை காமராஜர் படிக்க வைத்ததால் அவருடைய பெயரில் கல்வி நிறுவனம் தொடங்கினேன். அவரால் பல பிற்படுத்தப்பட்ட மக்கள் டாக்டர், ஐஏஎஸ் என்று பல பதவிகளுக்கு வந்தார்கள். நான் தொடங்கிய பள்ளி இன்றும் நடைபெற்று வருகிறது.
காசிமேடு பகுதி மீனவர்களுக்கு எந்த கள்ளங் கபடமும் தெரியாது. கோபம் இருந்தால் கூட யாரையும் பழிவாங்க மாட்டார்கள். காசிமேடு கேட் படத்தில் நிறைய மசாலா இருக்கிறது. அதற்கென்று தனி ஆடியன்ஸ் இருக்கிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்குமார், ராம் கோபால் வர்மாவிடம் அசிஸ்டெண்டாக பணியாற்றியவர். இப்போது மற்ற மொழி தயாரிப்பாளர்கள் தமிழுக்கு வருகிறார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று தமிழ்நாட்டுக்கு தொழில்களை ஈர்த்து வருகிறார். அந்த நேரத்தில் இங்கு வேலை இல்லாத ஒருவர் அதை விமர்சிக்கிறார்.
தமிழ்நாட்டின் தொழில் வளம் பெருக வேண்டும். அனைவரும் நம்பிக்கையோடு தமிழ்நாட்டுக்கு வரலாம். அனைத்து மாநிலத்தவரும் நம் சகோதரர்கள் தான். இன்னும் நிறைய படம் எடுங்கள். தமிழ் மக்கள் நிச்சயம் உங்களை வரவேற்பார்கள். கேஜிஎஃப் படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கதை வளம் கொண்ட படங்களைத் திட்டமிட்டு சரியான முறையில் எடுத்தால் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறும். தமிழர்கள் எப்போதும் நல்லவற்றைப் பாராட்டுவார்கள்.
சிவாஜி கணேசனுடன் ஒரு படத்தில் நான் வக்கீலாக நடித்தபோது என்னுடைய முடியை சரிசெய்து கொள்ளச் சொன்னார். இப்போது நிறைய தாடி வைத்துக்கொண்டு நடிக்கின்றனர். மக்கள் ஏற்றுக்கொள்வதற்காக அனைத்து தவறுகளையும் நாம் செய்யக்கூடாது. டக்கர் என்கிற படத்தில் ஹீரோயின் சிகரெட் குடிப்பது போலவும் மது குடிப்பது போலவும் காட்சிகள் உள்ளன. ஆண்கள் கெட்டுப் போய்விட்டார்கள். இயக்குநர்கள் தாய்மார்களையும் இந்த தீய பழக்கங்களுக்கு ஆளாக்காதீர்கள். காசிமேடு கேட் படம் அனைவரையும் கவர்ந்து வெற்றிபெறும்” என்றார்.