தீரன் இயக்கத்தில் சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’. இப்படத்தை சலீம் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (15.12.2021) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நக்கீரன் ஆசிரியர், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, இயக்குநர் எஸ்.ஏ.சி. உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
விழாவில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு பேசுகையில், "இந்தப் படத்தின் முன்னோட்டத்தினை காண என்னை அழைத்ததற்கு நன்றி. இந்தப் படத்தின் தலைப்பை பார்த்தவுடன் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படலாம். ஆனால், நீதித்துறையில் இருப்பவர்களுக்கு அந்த அதிர்ச்சி ஏற்படாது. இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் சமீபத்தில் தன்னுடைய சுயவரலாறை வெளியிட்டார். அந்த சுயசரிதைக்கு நீதிபதிக்கு நீதி எனப் பெயர் வைத்துள்ளார். அந்தப் புத்தகத்தின் முதல் பிரதியை வாங்குமாறு அவர் என்னை அழைத்தார். தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஒரு மாதத்திலேயே அவர் ஒன்றிய அரசால் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டவர். அவருடைய பதவிக்காலம் முழுவதும் நிறைய சர்ச்சைகள் உள்ளன. அதனால் மிக மரியாதையுடன் வரவில்லை என்று அவரிடம் கூறிவிட்டேன். அந்த புத்தக வெளியீட்டிற்கு பிறகு அவரை ஒரு நிருபர் பேட்டி கண்டார். அந்தப் பேட்டியில் நீதித்துறையில் ஊழல் இல்லையென்று சொல்கிறீர்களா என்று கேட்டதற்கு, நான் அதை மறக்கமாட்டேன். நீதித்துறையில் ஊழல் என்பது ஒரு வாழ்க்கையாகவே மாறிவிட்டது என்று சொன்னார். அதனால் இந்தப் படத்தின் டைட்டில் தொடர்பாக எந்தப் பிரச்னையும் வராது என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.
நீதியை எப்போதும் விற்றுக் கொண்டிருக்கமாட்டார்கள். நீதியை மறுப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஐயா பழநெடுமாறனை தீவிரவாத சட்டத்தில் வைத்தபோது பிணை கேட்டு நாங்கள் மனு போட்டோம். 19 மாதங்கள் கழித்து அவருக்கு பிணை கொடுத்தார்கள். ஆறு பேர் கைதுசெய்யப்பட்டதில் 5 பேர் விடுதலையாகிவிட்டனர். பழ.நெடுமாறன் ஐயா மட்டும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பிரபாகரன் பற்றிய புத்தகத்தை லண்டனுக்கு அனுப்ப முயற்சித்தார் என்று அவர் மீது சுங்க இலாகா வழக்கு ஒன்றுமிருந்தது. அந்த வழக்கில் இருந்தும் பிணை பெற்றால் மட்டும்தான் அவரால் வெளியே வர இயலும். அந்த வழக்கில் தண்டனை கிடைத்தால்கூட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடையாது. ஆனால், ஐயா பிணை கொடுக்கப்படாமல் 21 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டார். அந்த பிணை வழக்கிற்காக ஐயா என்னை கேட்டுக்கொண்டார். அந்த வழக்கிற்காக நான் செங்கல்பட்டு நீதிமன்றம் சென்றேன். 10 மணி வழக்கிற்கு நான் 9 மணிக்கே சென்றுவிட்டேன். அங்கு துப்புரவு பணியாளர்களைத் தவிர யாருமே இல்லை.
மணி 10.30 கடந்த பிறகும் நீதிபதி வரவில்லை. நீதிமன்ற ஊழியர்களிடம் அதுபற்றி கேட்டபோது, உச்ச நீதிமன்ற நீதிபதி திருத்தணி வந்திருக்கிறார். அதனால் இந்த நீதிபதியும் திருத்தணி சென்றுள்ளார் என்றார்கள். அன்று அங்கிருந்த வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததால் என்னையும் வாதாட கூடாது என்றனர். நான் வேறு சங்கத்தை சார்ந்தவன். சென்னையில் இருந்து வந்திருக்கிறேன். அதனால் வாதாடுவேன் என்று உறுதியாகக் கூறினேன். பின், நீதித்துறை அலுவலர் என்னிடம் வந்து ஐயா திருத்தணியில் இருக்கிறார். வழக்கை நாளை வைத்துக் கொள்ளலாமா என்றார். 5.45வரை நீதிமன்றம் உண்டு. அதுவரை நான் காத்திருக்கிறேன். நீங்கள் அவரை வரச் சொல்லுங்கள் என்றேன்.
அந்த நீதிபதி 3 மணிக்கு வந்தார். நீதிபதியும் இன்று வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் என்று சொன்னார். நான் வெளியூர் வழக்கறிஞர். இந்த வழக்கு பிணை வழக்கு. அதனால் மூன்று நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்ளமாட்டேன் என்றேன். தர்மசங்கடமான நிலையில் வந்து நீதிபதி வழக்கை விசாரித்தார். ஆனால், தீர்ப்பு வழங்கவில்லை. தீர்ப்பை எழுதாமல் தாமதப்படுத்துவதும் மறுக்கப்பட்ட நீதிதான். திங்கட்கிழமை காலை அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தீவிரவாத வழக்கிலேயே ஐயா வெளியே வந்துவிட்டார். ஆனால், சுங்க இலாகா வழக்கில் அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. பின், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இரண்டு நிமிடத்தில் பிணை பெற்றோம். ஐயாவும் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
நீதி என்பது விற்கமட்டும் படவில்லை. விற்கப்படாமல் மறுக்கப்பட்டும் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு அதில் எப்படி தீர்ப்புகள் விற்கப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். இந்தப் படத்தின் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" எனக் கூறினார்.