ஆண்டுதோறும் ஹாலிவுட் சினிமாத்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் வெகு விமர்சியாக நடைபெற்றுள்ளது. தொகுப்பாளர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் இந்த விழாவில் பிரபல திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஜோக்கர், பாரசைட் உள்ளிட்ட 9 படங்கள் பரிந்துரையில் இடம்பெற்றன.
இந்நிலையில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜோக்கர் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக வாக்கின் பீனிக்ஸிற்கு வழங்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்டபின் மேடையில் பேசுகையில், “எனக்கு இப்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. சிறந்த நடிகருக்காக என்னுடன் பரிந்துரைக்கப்பட்ட சக நடிகர்களுக்கும் அல்லது இந்த அறையில் உள்ள எவருக்கும் மேலாக நான் உயர்ந்தவனாக உணரவில்லை, ஏனென்றால் நாங்கள் ஒரே அன்பைப் பகிர்ந்து கொள்கிறோம், அதுதான் படத்தின் மீதுள்ள எங்கள் காதல். இதுபோன்ற வெளிப்பாடு எனக்கு அசாதாரண வாழ்க்கையை அளித்துள்ளது. அந்த வெளிப்பாடு இல்லாமல், நான் எங்கே இருப்பேன் என்று எனக்குத் தெரியாது.
ஆனால் அது எனக்கு வழங்கிய மிகப் பெரிய பரிசு என்று நான் நினைக்கிறேன், இத்துறையில் பலர் குரலற்றவர்களுக்காக தங்கள் குரலைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்த இடத்தை கருதுகின்றனர். நாம் கூட்டாக எதிர்கொண்டுள்ள சில துன்பகரமான சிக்கல்களைப் பற்றி நான் யோசித்து வருகிறேன்.
சில நேரங்களில் நாம் அனைவரும் வெவ்வேறு காரணங்களுக்காக போராடுகிறோம் என நமக்கு தோன்றுவது உண்டு. ஆனால், என்னை பொறுத்தவரை நாம் அனைவருமே எதோ ஒரு வகையான அநீதிக்கு எதிராகதான் போராடுகிறோம். பாலின சமத்துவமின்மை அல்லது இனவெறி அல்லது பாலின உரிமை அல்லது விலங்குகளுக்கான உரிமைகள் என எதுபற்றி நாம் பேசினாலும், அது எதாவது ஒரு அநீதிக்கு எதிரான போராட்டமே.
ஒரு தேசம், ஒரு மக்கள், ஒரு இனம், ஒரு பாலினம் என மற்றொருவர் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அதை பயன்படுத்தி, அடுத்தவர்களை கட்டுப்படுத்துவதற்கும் உரிமை உண்டு என்ற நம்பிக்கைக்கு எதிரான போராட்டத்தைப் பற்றி நாம் பேசுகிறோம்.
இயற்கையுடனான உறவிலிருந்து நாம் அனைவரும் விலகிவிட்டோம் என்று நான் நினைக்கிறேன். நாம் பிரபஞ்சத்தின் மையம் என நம்புகிறோம். நாம் இயற்கை உலகத்திற்குச் சென்று அதன் வளங்களுக்காக அதைக் கொள்ளையடிக்கிறோம். ஒரு பசுவை செயற்கையாக கருவூட்டவும், குழந்தையைத் திருடவும் எங்களுக்கு உரிமை உண்டு, கன்றுக்குட்டிக்கு கொடுக்க வேண்டிய பசுவின் பாலை எடுத்து, அதை நம் காபியிலும், தானியத்திலும் பயன்படுத்துகிறோம்.
சுய மாறுதலை கண்டு அஞ்சுகிறோம், ஏனென்றால் நமக்கு பிடித்த ஒன்றை தியாகம் செய்ய நெரிடும் என்பதால்தான் . மனிதர்கள் சிறந்த கிரியேட்டிவ் மற்றும் இன்வெண்டிவ்வாக எதை வேண்டுமானாலும் உருவாக்கலாம், ஆனால் அது சுற்றுச்சூழலுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் நன்மையாக இருக்க வேண்டும்.
நான் என் வாழ்க்கையின் பெரும் பகுதியில் மோசமானவானக இருந்தேன், நான் சுயநலவாதியாக இருந்தேன். நான் சில நேரங்களில் கொடூரமானவனாகவும்,என்னுடன் வேலை செய்வது கடினமாகவும் இருந்தபோது இந்த அறையில் உங்களில் பலர் எனக்கு இரண்டாவது வாய்ப்பு அளித்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இதுபோல மற்றவர்களுக்கு துணை நிற்கும்போதுதான் நாம் சிறந்த மனிதர்களாக வெளிகாட்டப்படுகிறோம். அவர்களின் கடந்தகால தவறுக்காக அவர்களை நிராகரிப்பதன் மூலம் அல்ல. ஆனால், நாம் எப்போது அடுத்தவர்களின் வளர்சிக்கு உதவுகிறோமோ அவர்களோடு சேர்ந்து புதிய விசயங்களை கற்கிறோமோ, அவர்களின் வெற்றிக்காக அவர்களை எப்படி ஊக்குவிக்கிறோமோ என்பதை பொருத்தே அமைகிறது” என்றார்.