![zcsvs](http://image.nakkheeran.in/cdn/farfuture/7hQ7mydaIf-ayqULk2-cv1dxLTxpRNqgBkTgUnSGyig/1611052305/sites/default/files/inline-images/EsAs1X1XYAMJk50.jpg)
கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், எஸ்.சதீஷ்குமார், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்கள். அப்போது விழாவில் நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியபோது....
“இந்த இசை வெளியீட்டு விழாவில் தனஞ்செயன் சார் எப்படி அனைத்து பணிகளையும் செய்கிறாரோ, படப்பிடிப்பிலும் அப்படித்தான் இருப்பார். அனைத்து பணியிலும் அவருடைய ஈடுபாடு இருக்கும். பொதுவாக தயாரிப்பாளர்கள் அலுவலகத்தில்தான் இருப்பார்கள் படப்பிடிப்பு தானாக நடக்கும். ஆனால், தனஞ்செயன் சார் அனைத்திலும் ஈடுபாட்டுடன் செயல்படுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதோடு நமக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும் இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறப்பான கதாப்பாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இந்த படம் குறித்து இயக்குநர் பிரதீப் என்னிடம் பேசும்போது, என்னை சந்திக்க எனது வீட்டுக்கே வந்தார். பொதுவாக இயக்குநர்கள் அப்படி வர மாட்டார்கள். அலுவலகம் அல்லது பொது இடங்களில் தான் சந்திப்பார்கள்.
ஆனால், பிரதீப் எந்தவித ஈகோவும் இல்லாமல் என்னை தேடி என் வீட்டுக்கு வந்து கதை சொன்னார். இயக்குநரின் அந்த நடவடிக்கையே எனக்கு படத்தின் மீது ஈடுபாட்டை கொடுத்து விட்டது. படம் முழுவதும் நான் மகிழ்ச்சியாக பணிபுரிந்திருக்கிறேன். பிரதீப்பிடம் படம் தொடர்பாக அனைத்துவிதமான ஆலோசனையிலும் ஈடுபடுவேன். என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நமது கருத்துக்கும் யோசனைக்கும் அவர் செவி கொடுப்பார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலும் நான் நடித்திருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரொம்ப பிஸியாக நடித்த படம் இது தான். ஹீரோ சிபி சாருடன் தான் என் கதாப்பாத்திரம் பயணிக்கும். அவருக்கும் எனக்கும் இடையே ஒரு பிக்ஷன் இருந்துக் கொண்டே இருக்கும். மொத்தத்தில் நான் முழு திருப்தியுடன் நடித்த படம். இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி” என்றார்.