![irrfan khan](http://image.nakkheeran.in/cdn/farfuture/0aYMuauuZQoxgiEm0nyk0IUjmYiFie5xkf1eDQga5UA/1588324829/sites/default/files/inline-images/irrfan%20khan%20with%20wife%20.jpg)
கடந்த இரண்டு வரடங்களாகப் புற்று நோயால் அவதிப்பட்டு, போராடி வந்த நடிகர் இர்ஃபான் கான் ஏப்ரல் 28 ஆம் தேதி இரவு மும்பையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 29 ஆம் தேதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவையொட்டி திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என்று உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இர்ஃபான் கானின் மனைவி தங்களுடைய குடும்பத்தின் சார்பாக இர்ஃபான்கானின் மறைவு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களின் சொந்த இழப்பாக எடுத்துக்கொண்டபோது எப்படி நான் இதைக் குடும்ப அறிக்கையாக எழுத முடியும்? அந்தச் சமயத்தில் லட்சக்கணக்கானோர் சேர்ந்து எங்களுடன் வருந்தியபோது நான் மட்டும் எப்படித் தனிமையாக உணர முடியும்? உங்கள் எல்லோருக்கும் ஒன்றை உறுதியாகத் தெரிவிக்கிறேன் இது ஒரு இழப்பு அல்ல, ஆதாயமே. அது என்ன மாதிரியான ஆதாயம் என்றால், அவர் நமக்கு கற்பித்ததை, நாம் அனைவரும் சேர்ந்து உண்மையாக அதைச் செய்து பார்த்துக் கண்டுபிடிக்க தொடங்குவதுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தனது கணவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தும், தனது மகன்கள் இருவரும் இர்ஃபானின் வழியில் குடும்பம் என்னும் இந்தப் படகைத் துடுப்பு போட்டு முன்னெடுத்து செல்வார்கள் என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.