‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற வித்தியாசமான படத்தை இயக்கி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன். படம் முழுவதும் தனி ஒருவராக நடித்த பார்த்திபனின் இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததோடு கடந்த ஆண்டுக்கான தேசிய விருதையும் இப்படம் தட்டிச் சென்றது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பார்த்திபன் 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் ஆஸ்கர் வின்னர்கள் கட்டா லங்கோ லியோன் என்பவர் விஷுவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளராகவும், கிரைக் மான் என்பவர் சவுண்ட் டிசைன் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர், ஏ.ஆர் ரஹ்மானுடன் சேர்த்து மொத்தம் மூன்று ஆஸ்கர் வின்னர்கள் இப்படத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இரவின் நிழல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார். இப்படம் 100 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இரவின் நிழல் Non Linear முறையில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்பதை பார்த்திபன் தெரிவித்துள்ளார்.