தனுஸ்ரீ தத்தா, இந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழில் விஷாலின் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். பின்பு 2010-ஆம் ஆண்டிற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தார். இதனிடையே கடந்த 2018-ஆம் ஆண்டு ஒரு பேட்டியில், தான் 2009-ஆம் ஆண்டு நடந்த படப்பிடிப்பின் போது பாலிவுட் நடிகர் நானா படேகரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என குற்றம் சாட்டினார். பின்பு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா தனது சமூக வலைதளபக்கத்தில் "நான் மிகவும் துன்புறுத்தப்பட்டு மோசமாக குறிவைக்கப்படுகிறேன். தயவு செய்து யாராவது ஏதாவது செய்யுங்கள்" என குறிப்பிட்டு ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இவரது பதிவு தற்போது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தனுஸ்ரீ தத்தா வெளியிட்டுள்ள பதிவில், "முதலில் எனது பாலிவுட் பணிகள் கடந்த ஒரு வருடத்தில் நாசமாக்கப்பட்டது. பின்பு எனது வீட்டின் பணிப்பெண்ணின் மூலம் குடிநீரில் மருந்துகள் மற்றும் ஸ்டெராய்டுகள் கலக்கச் செய்தனர். இது கடுமையாக அனைத்து வகையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தியது. பிறகு நான் உஜ்ஜயினிக்கு தப்பிச் சென்றேன். அப்போது எனது வாகனத்தின் பிரேக் இரண்டு முறை சேதமடைந்து விபத்துக்குள்ளானது.
அந்த மரணத்திலிருந்து தப்பித்து, 40 நாட்களுக்குப் பிறகு இயல்பு வாழ்க்கை மற்றும் எனது பணிகளை தொடர மும்பை திரும்பினேன். இப்போது என் குடியிருப்புக்கு வெளியே அருவருப்பான விஷயங்கள் நடக்கின்றன. அனைவரும் காது கொடுத்து கேளுங்கள், நான் நிச்சயமாக தற்கொலை செய்து கொள்ளப் போவதில்லை. நான் எங்கும் வெளியேற போவதில்லை. நான் இங்கு தான் தங்கி எனது பொது வாழ்க்கையை முன்பை விட உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவேன். பொதுவாக பாலிவுட் மாஃபியா, மகாராஷ்டிராவின் பழைய அரசியல் வட்டாரம் மற்றும் தீய தேசவிரோத சக்திகள் ஒன்றாக சேர்ந்து மக்களை தொந்தரவு செய்ய இதுபோல் செய்வார்கள். நான் உறுதியாக நம்புகிறேன் இதற்கு பின்னால் நான் அம்பலப்படுத்திய என்ஜிஓ (NGO)-க்கள் மற்றும் மீடு (metoo) குற்றவாளிகள் தான் இருக்கிறார்கள். இல்லையென்றால் நான் ஏன் இப்படி குறிவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறேன், அவமானமாக இருக்கிறது.
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி மற்றும் ராணுவ ஆட்சி நிறுவப்பட வேண்டும், கீழ்மட்ட விஷயங்களிலும் மத்திய அரசு முழு கவனத்தை செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இங்கே விஷயங்கள் உண்மையில் கைமீறி போகின்றன. என்னைப் போன்ற சாதாரண மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இன்று நான், நாளை அது நீயாகவும் இருக்கலாம். சகோதரர்களே எனக்கு உதவுங்கள்" என காட்டமாக பதிவிட்டுள்ளார்.