முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்ட நிலையில், சசிகலா தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது அங்கு பல சம்பவங்கள் நடைபெற்றதாக அதிமுகவின் முன்னாள் சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி. ராஜு தற்போது குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் நடிகை த்ரிஷா மற்றும் கருணாஸ் குறித்தும் அவதூறாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில், திரைத்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சேரன், “வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலையும், பொருளாளர் கார்த்தியையும் டேக் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் இறங்கி தரம் தாழ்ந்து பேசும் இதுபோன்ற மனிதர்களை தொடர்ச்சியாக பார்ப்பதற்கு அறுவறுப்பாக உள்ளது. இந்த அவதூறுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனி இவ்விவகாரம் தொடர்பாக எனது சட்ட ஆலோசகரே பேசுவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஃபெப்சி இந்த விவகாரம் தொடர்பாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “இன்றைய சமூக வலைத்தளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட ஏ.வி. ராஜீ என்பவர் திரைத்துறை குறித்து சில தரமற்ற, அவதூறுகளைக் கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்பந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் கருணாஸையும் சம்பந்தப்படுத்தி இந்த கீழ்த்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார். அரசியலில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதற்கு அவர்களுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, கீழ்த்தரமான அவதூறுகளைத் திரையுலகப் பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இத்தகைய அநாகரிகமான கீழ்த்தரமான செயலை, தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கிறோம். பஞ்சாயத்து தலைவரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் முதல் பாரத குடியரசின் தலைவராக முர்மு வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்த பாரத தேசத்தில் ‘பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மீதும்’ நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்புக் கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்குப் பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.