
மலையாள நடிகை வின்சி அலோசியஸ் கேரளாவில் சமீபத்தில் நடந்த போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சியில் “போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்” எனப் பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது. இதையடுத்து விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், தனக்கு நடந்த அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அவர் பகிர்ந்திருந்ததாவது, “நான் ஒரு முக்கிய நடிகரின் படத்தில் நடித்து கொண்டிருந்த போது அவர் போதை பொருள் பயன்படுத்தி தகாத முறையில் நடந்து கொண்டார். அவருடன் நடிப்பது கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் படப்பிடிப்பில் எனது உடையில் சில சிக்கல் இருந்தது, அதை சரி செய்ய நான் சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த அந்த நடிகர் இதை சரி செய்ய நான் உதவுகிறேன் என சொல்லி என் கூடவே வருவதாக சொன்னார். இதனை அனைவரின் முன்பும் சொன்னதால் எனக்கு சங்கடமாகிவிட்டது.
பின்பு ஒரு காட்சியின் ரிஹர்சலின் போது அவரது வாயிலிருந்து வெள்ளை கலரில் ஒரு துளி டேபிலில் சிந்தியது. அதை பார்க்கையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது தெளிவாகத் தெரிந்தது. இது படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் தொந்தரவாக மாறியது” என்றார். இதனால் யார் அந்த நடிகர் என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் நடிகை வின்சி, நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகர் சங்கம், திரைப்பட வர்த்தக சபை மற்றும் சிறப்பு கமிட்டி ஆகியவையிடம் புகார் அளித்தார். இந்த அத்துமீறல் சம்பவம் வின்சியும் ஷைன் டாம் சாக்கோவும் இணைந்து நடித்த ‘சூத்ரவக்யம்’ படத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கேரளாவில் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப் படை ஒரு ஹோட்டலில் சோதனை நடத்திய போது அங்கிருந்து ஷைன் டாம் சாக்கோ தப்பி செல்லும் சி.சி.டி.வி. வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து ஷைன் டாம் சாக்கோ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். விசாரணைக்குப் பின்பு அவர் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் வெளியே வந்தார். இதனை அடுத்து சிறப்பு கமிட்டி முன்பு வின்சி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். பின்பு இந்த பிரச்சனையை திரைப்பட சங்கங்களுக்குள்ளே முடித்து கொள்வதாகவும் சட்ட ரீதியாக கொண்டு போக விரும்பவில்லை எனவும் கூறினார். இதனிடையே ஷைன் டாம் சாக்கோ வின்சியிடம் மன்னிப்பு கேட்டதாகவும் இதுபோல் இனி நடக்காது என்று உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கேரள திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு(FEFKA) நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு, இனிமேல் இதுபோல் நடக்கக்கூடாது எனவும் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நடிகரின் குடும்பத்தினரிடம் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து அவர் விடுபட சரியான ஆலோசகர்கள் தேவை எனவும் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி. உன்னிகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “இனிமேல் எந்த பிரச்சனையும் செய்யமாட்டேன் என அவர் அளித்த உறுதிமொழியை மீறினால் நாங்கள் அவருக்கு ஒத்துழைக்க மாட்டோம்” என்றார்.