Skip to main content

'இதுதான் 100% சரியான தருணம், வா தலைவா!' - அஜித்தை அரசியலுக்கு அழைத்த இயக்குனர், கிளம்பிய சர்ச்சை 

Published on 17/03/2019 | Edited on 17/03/2019

நாடாளுமன்ற தேர்தலின் பரபரப்பு, நாடெங்கும் பற்றிக்கொண்டது. ஒவ்வொரு கட்சியும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவருகின்றன. சினிமாவிலிருந்து அரசியலுக்கு லேட்டஸ்ட்டாக வந்த கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வேளைகளில் பிஸி. வருவேன் என்று சொல்லிவரும் ரஜினிகாந்த், விஜய் இருவரும் பட வேலைகளில் பிஸி. இப்படியிருக்கும் சூழ்நிலையில், அரசியல் பற்றி எதுவுமே பேசாத அஜித்தை அரசியலுக்கு அழைத்து சமூக ஊடகங்களில் பரபரப்பை கிளப்பியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

 

suseenthiran director



தமிழ் நடிகர்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் முக்கியமான ஒருவர் அஜித். சமீபத்தில் இவர் நடித்து பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அஜித் ரசிகர்கள் சமீபத்தில்தான் அதன் 50வது நாளைக் கொண்டாடி குதூகலத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று இயக்குனர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'வறுமையை உணர்ந்தவனால் மட்டுமே மக்களின் தலைவனாக முடியும்' என்று  கையெழுத்தால் காகிதத்தில் எழுதப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

 

suseenthiran tweet

 

susee tweet



பிறகு சற்று நேரம் கழித்து, 'அஜித்குமார் அண்ணனின் ரசிகர்களுக்கு 10.30PM  today' என்று எழுதப்பட்ட இன்னொரு புகைப்படத்தை வெளியிட்டார். இந்த ட்வீட் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ஆர்வலர்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. பின்னர் இரவு 10.30 மணிக்கு கீழே உள்ள புகைப்படத்தை ட்வீட் செய்தார்.

 

suseenthiran tweet



அவர் செய்த ட்வீட், சோசியல் மீடியாவில் சர்ச்சையை உண்டாக்கியது. இதனை ஆதரித்தும் விமர்சனம் செய்தும் பலர் கமெண்ட் செய்தார்கள். அஜித் ரசிகர்களில் சிலர் இதை ஆதரித்தாலும், இன்னொரு சாரார் 'அரசியல் வேண்டாம் அஜித்தே போதும்' என்றொரு ஹேஷ்டேகை உருவாக்கி ட்ரெண்ட் செய்தனர். இயக்குனர் சுசீந்திரன், 'வெண்ணிலா கபடிக் குழு', 'நான் மகான் அல்ல', 'பாண்டிய நாடு', 'ஜீவா' என பல வெற்றிப்படங்களை இயக்கியவர். இவர் தற்போது 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தில் நடித்து முடித்து 'கென்னடி க்ளப்' படத்தை இயக்கி வருகிறார். இவரது படங்களில் சமூக கருத்துகள் இருக்கும். 'வெண்ணிலா கபடிக் குழு'வில் கிராமத்து சாதிப் பிரிவினைகளைப் பேசிய இவர், 'ஜீவா' படத்தில் கிரிக்கெட்டில் நடக்கும் அரசியலை பேசினார். 'மாவீரன் கிட்டு', சாதிக் கொடுமைகளை இன்னும் வெளிப்படையாகப் பேசிய படம்.

சுசீந்திரன், இதற்கு முன்பே ஒரு பேட்டியில் 'கமல் சார், அஜித் சார் போன்றவர்கள் அரசியலில் இருக்க வேண்டும்' என்றும் இன்னொரு முறை 'அஜித் போன்றவர்கள் முதல்வராக வேண்டும்' என்றும் கூறியிருந்தார். தற்போது அஜித்தைக் குறிப்பிட்டு அவரை நேரடியாக அரசியலுக்கு அழைத்துள்ளார் சுசீந்திரன். கடந்த ஜனவரி மாதம், திருப்பூரில் நடந்த பாஜக கூட்டம் ஒன்றில் அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்ததாகக் கூறப்பட்டது. அவ்விழாவில் கலந்துகொண்ட தமிழிசை சௌந்தரராஜன், அஜித்தைப் பாராட்டியும் அரசியலுக்கு வந்தால் நல்லது என்பது போலவும் குறிப்பிட்டு பேசியிருந்தார். அடுத்த நாளே அஜித்தின் சார்பாக, தான் எந்த கட்சியிலும் இல்லையென்றும் எந்தக் கட்சிக்கும் தனது ஆதரவு இல்லையென்றும் தனது ரசிகர்கள் ஆழ்ந்து சிந்தித்து தங்கள் விருப்பப்படி அரசியல் செயல்பாடுகளை வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் கூறி ஒரு அறிக்கை வெளியானது.

தற்போது இயக்குனர் சுசீந்திரன் அஜித்தை அழைத்திருக்கிறார். அதுவும் 40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றம் வேண்டும் என்று கூறி அழைத்திருக்கிறார். பதில் வருகிறதா பார்ப்போம்.     

 

 

சார்ந்த செய்திகள்